இரு நாட்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

Friday, August 17th, 2018

ஐ. நா சபையின் தடையை மீறிய செயற்பாடுகளில் ஈடுபட்ட ரஷ்ய மற்றும் சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது.

அணு ஆயுத விதிமுறைகளுக்கு முரணான வகையில் ஆயுத பரிசோதனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவுடன் குறித்த நிறுவனங்கள் தொடர்புகளை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அணு ஆயுத விதிமுறைகளை மீறும் வகையில் வடகொரியா செயற்படுவதாக கடந்த காலங்களில் சர்வதேச ரீதியாக வடகொரியா மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்தன. இதனால் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையினால் வடகொரியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன.

வடகொரியாவுடன், சர்வதேச நாடுகள் பொருளாதார ரீதியாக எந்தவித கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்ள முடியாதென்பது இந்த தடையின் முக்கிய நிபந்தனையாக அமைந்திருந்தது.

இந்த தடையினை மீறும் வகையில் சீனா மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் கொடுக்கல்களை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

இதனிடையே அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொள்ளும் தமது நடவடிக்கைகளை கைவிடுவதாக வடகொரியா அண்மையில் அறிவித்திருந்த நிலையில், அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கிடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பில், அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்று வடகொரிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள நிலையில், குறித்த நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதில் அமெரிக்கா தொடர்ச்சியாக கண்டிப்பான போக்கை கடைபிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: