அரசுடன் நாம் இணக்க அரசியலை மேற்கொண்டிருந்தாலும் அந்தந்த வேளைகளில் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியும் வந்துள்ளோம் – டக்ளஸ் எம்.பி!

Thursday, June 13th, 2019

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்கள் முன் செல்ல அச்சப்படுகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பண்டத்தரிப்பு சாந்தை விநாயகர் சனசமூக நிலைய நிர்வாகத்தினருடனான சதிப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்தகால வரலாறுகள் என்பது எமது மக்களுக்கு பல்வேறு விதமான அனுபவங்களையும் பாடங்களையும் தந்துள்ளது. எந்த ஒரு நிலையிலும் அரசு தமது நலன்களிலேயே அக்கறை கொண்டு அதனை முன்னெடுக்கும் வகையில் தான் செயற்படுவார்கள் என்பது யாவரும் அறிந்த விடயம்.

அந்தவகையில் தான் நாங்கள் கடந்த காலங்களில் எமக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் எமது மக்களுக்காக முன்னெடுக்கும் வகையிலேயே இணக்க அரசியலை தேர்ந்தெடுத்து அதனூடாக பல மக்கள் நலன் சார் செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தோம்.

அதுமாத்திரமன்று எமது இணக்க வழியுடான செயற்றிட்டங்களினூடான மக்களுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு விதமான வாழ்வாதார மற்றும் அபிவிருத்தி போன்ற நடவடிக்கைகளை கடந்தகாலங்களில் துணிச்சலுடனும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தும் வந்திருக்கின்றோம்.

நாம் ஒருபோதும் அரசை குற்றம் சாட்டியோ அல்லது பிழை கண்டுபிடித்தோ எமது அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை.

அரசு தவறிழைக்கும் பட்சத்தில் அரசுடன் நாம் இணக்க அரசியலை மேற்கொண்டிருந்தாலும் அந்தந்த வேளைகளில் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியும் வந்துள்ளோம்.

ஆனால் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியலை மேற்கொண்டுவரும் நிலையில் கிடைக்கப்பெற்ற பல வாய்ப்புக்களை மக்கள் நலன்சார்ந்து பயன்படுத்த தவறி விட்டார்கள். இதன் காரணமாக தற்போது மக்கள் முன்செல்ல அவர்கள் அச்சப்படுகின்றனர் என்றும் டக்ளஸ் தேவானந்தா இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related posts: