அமோனியக் கசிவால் பங்களாதேஷில் 200 பேர் பாதிப்பு!

Wednesday, August 24th, 2016

பங்களாதேஷின் சிட்டகொங் நகரிலுள்ள இரசாயனத் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவால், குறைந்தது 200 பேர் பாதிக்கப்பட்டு, வைத்திய சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர். அந்நகரத்தில் ஏற்பட்ட கசிவு காரணமாக, நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் அந்த வாயு பரவியமையாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக, அந்நாட்டு அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்தனர்.

குறித்த தொழிற்சாலை காணப்படும் இடத்துக்கு அண்மையில் வசித்துவந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள், அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும், குறித்த அமோனியாத் தாங்கி, திங்கட்கிழமை இரவு, வெடித்துள்ளதாகத் தெரிவித்தனர்.

சிட்டகொங் மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில், 56 பேர் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்த அதிகாரிகள், அவர்களில் எட்டுப் பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய 48 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவித்தனர். எனினும், எவருக்கும் உயிராபத்துக் காணப்படவில்லை எனவும் அறிவிக்கப்படுகிறது. மேலும் 150 பேரளவில், முதலுதவிச் சிகிச்சைகளைப் பெற்றுள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலைகளில் பின்னர் அனுமதிக்கப்பட்டார்களா என்பத தொடர்பில் தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கசிவைத் தொடர்ந்து, தீயணைக்குப் படையினரில் 60 பேர் அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, வெடிப்பு ஏற்பட்ட தாங்கி தவிர, இன்னுமிரு தாங்கிகளும் வெடிக்கும் நிலையில் காணப்பட்ட போதிலும், நீரூற்றி, அந்தத் தாங்கிகள் வெடிப்பது தடுத்து நிறுத்தப்பட்டது.

அமோனியா வாயு, சாதாரண நிலைமைகளில் பாரிய ஆபத்தை ஏற்படுத்தாது என்பதுடன், நீரில் கரையும் போது மாத்திரம், நீரில் வாழும் உயிரினங்களுக்குப் பேராபத்து விளைவிக்கக்கூடியது. ஆனால், தாங்கிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது, மிகவும் அடர்த்தியான அமோனியா என்பதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது

Related posts: