அமெரிக்காவை கலங்க வைத்த ஈரானின் அறிவிப்பு!

Friday, January 10th, 2020

அமெரிக்கப் படைகள் அனைத்தும் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து உதைத்து வெளியேற்றப்படும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில், “ஈரான் இராணுவத் தளபதி காசிம் சோலெய்மனி ஐ.எஸ். மற்றும் அல்-குவைதா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக வீரமாகப் போராடியவர்.

அவர் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடவில்லை என்றால் ஐரோப்பிய தலை நகரங்கள் தற்போது ஆபத்தில் இருந்திருக்கும்.

சோலெய்மனியின் படுகொலைக்கு நாங்கள் அளிக்கும் இறுதிப் பதில் அமெரிக்காவின் படைகள் அனைத்தும் இந்தப் பிராந்தியத்தில் இருந்து அடித்து அனுப்பப்படுவதாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் படையின் தளபதி சோலெய்மனி, கடந்த 3ஆம் திகதி ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க இராணுவத்தின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் காசிம் சோலெய்மனி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து இந்தத் தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்குவோம் என ஈரான் அரசு அறிவித்த நிலையில் ஈராக்கில் பாக்தாத் அருகே அமைந்துள்ள இர்பில் மற்றும் அல் ஆசாத் விமானத் தளங்களைக் குறிவைத்து ஈரான் இராணுவம் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தியது. இதில் 80 அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் அறிவித்தது.

இந்நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதன் மூலம் அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம் என ஈரானின் மூத்த தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்திருந்தார். அத்துடன் இந்த இராணுவ நடவடிக்கை காசிம் சோலெய்மனியின் இழப்புக்கு போதாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் சூழலில், ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் ருவிற்றர் பதிவு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: