குண்டு வெடிப்புகளுக்கு ஐ.எஸ் உரிமை கோரியது!

Tuesday, September 6th, 2016

சிரிய அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளில் நேற்று (05) இடம்பெற்ற, குண்டு வெடிப்புகள் ஐந்துக்கும் ஐ.எஸ். குழு உரிமை கோரியுள்ளது. இக்குண்டு வெடிப்புகளில், குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கணக்கானர்கள் காயமடைந்ததாகவும் சிரிய அரச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சிரியாவின் கரையோர நகரான டாட்டரஸ், மத்திய நகரான ஹொம்ஸ், தலைநகர் டமஸ்கஸ்ஸின் புறநகர்ப் பகுதிகள், குர்திஷ் படைகளினால் பெரும்பாலாக கட்டுப்படுத்தப்படுகின்ற, அரசாங்கத்தின் பிரசன்னமும் காணப்படுகின்ற ஹஸாகா ஆகிய இடங்களையே குண்டு வெடிப்புகள் தாக்கியிருந்தன.சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட் அரசாங்கத்தின் தளம் ஒன்று அமைந்துள்ள கரையோர மாகாணமான டாட்டரஸ் மாகாணத்தின்  டாட்டாரஸ் நகரத்துக்கு சற்று வெளியே இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதல்களில், குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டிருந்ததுடன் 43 பேர் காயமடைந்ததாக சிரிய அரச ஊடகம் தெரிவித்திருந்தது.

அர்ஸூனா பாலத்தில், இரண்டு பயங்கரவாத வெடிப்புகள் இடம்பெற்றதாகவும், முதலாவதாக கார்க் குண்டும், அதில் காயமடைந்தவர்களுக்கு ஏனையவர்கள் உதவிக் கொண்டிருந்தபோது, இரண்டாவதாக, தற்கொலைக் குண்டுதாரியொருவர், தனது தற்கொலை அங்கியை வெடிக்க வைத்ததாக சிரிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டாட்டரஸ் குண்டு வெடிப்புகளில் 38 பேர் கொல்லப்பட்டதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட கண்காணிப்புக் குழுவான, மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம், கொல்லப்பட்டவர்களில், ஒரு குழந்தையும் இரண்டு பெண்களுமாக, பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. இது தவிர, குர்டிஷ் அசயேஷ் பாதுகாப்புப் படைகளின் சோதனைச்சாவடியை குண்டுத் தாக்குதல் தாக்கியதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, சிரியாவின் வடகிழக்கு பகுதியான ஹஸாகாவில், வெடிபொருட்கள் நிரம்பிய மோட்டார்சைக்கிளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் எட்டுப் பேர் கொல்லப்பட்டதுடன் இரண்டு பேர் காயமடைந்ததாக சிரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தவிர, அல்-ஸஹ்ரா புறநகர்ப் பகுதியின் வாயிலிலுள்ள, ஹொம்ஸின் பாப் டடாமுர் சுற்றுவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், 10 பேர் காயமடைந்திருந்ததாக அரச ஊடகம் கூறியுள்ளது.

தவிர, தலைநகர் டமஸ்கஸ்ஸுக்கு மேற்காகவுள்ள அல்-ஸப்பௌரா வீதியில் மேற்கொள்ளப்பட்ட இன்னொரு குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மூவர் காயமடைந்ததாக சிரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

90271760_0338448841

Related posts: