அகதிகளாக அல்லாடும் அபலைப் பெண்கள்!

Tuesday, May 17th, 2016
அகதிகள் விவகாரம் உலகின் முக்கியப் பிரசனையாக உருவெடுத்திருப்பதாக ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. தஞ்சம் கோரிவரும் அகதிகளை துரத்திவிடுவது பிரச்சனையைத் தீர்க்காது என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது.
அகதிகளுக்கு உலகநாடுகள் அனைத்தும் கைகொடுக்க வேண்டிய தருணம் வந்திருப்பதாக ஐநாவின் சிறப்புத்தூதுவரான ஹாலிவுட் நடிகை ஆஞ்சலினா ஜோலி பிட் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே ஐரோப்பா வரும் குடியேறிகளில் குழந்தைகளுடன் தனியாக வரும் பெண்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிப்பது குறித்து தொண்டு நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
அறிமுகமில்லா நாட்டில் தன்னந்தனியாக சின்னஞ்சிறு பிள்ளைகளுடன் தனியாக வரும் தாய்மார்கள் மற்றும் விதவைகள் பலவிதமான நெருக்கடிகளை சந்திப்பதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இப்படி பயணிக்கும் பலர் விதவைகள். மற்ற பெண்களோ ஏற்கனவே ஐரோப்பாவிலுள்ள கணவன் அல்லது சகோதரர்களோடு இணைவதற்காக பயணிப்பவர்கள்.
கிரேக்கத்திலிருக்கும் காரா தெபெ முகாம் ஓரளவு பாதுகாப்பானது மற்றும் நன்கு பராமரிக்கப்படுகின்றது. ஆனால் பெண்கள் தனியாக இருப்பது பாலியல் துஷ்பிரயோகத்துக்கான சாத்தியத்தை அதிகரிக்கும் என்கின்றன தொண்டு அமைப்புகள்.
அதேசமயம் இவர்களில் சிலர் தமக்கான புது உறவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஜெர்மனிக்கு சென்றால் அகதித்தஞ்சம் கிடைக்கும் என்பது இவர்களில் பலரின் நம்பிக்கை. ஆனால் ஐரோப்பிய எல்லைகள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுவிட்டதால் இவர்களின் நிலைமை திரிசங்கு நிலையாக இருக்கிறது.
இடைத்தங்கல் முகாம்களில் இருக்கும் பலரும் தங்கள் எதிர்காலம் என்னவாகும் என்பது தெரியாமல் ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள்

Related posts: