500வது டெஸ்டில் நியூசிலாந்தை பந்தாடிய இந்தியா!

Monday, September 26th, 2016

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 197 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி இந்திய அணிக்கு 500வது டெஸ்ட் போட்டியாகும்.

இதில் முதல் இன்னிங்ஸில் முரளி விஜய் (65), புஜாரா (62) ஆகியோரின் நிதான ஆட்டத்தாலும், ஜடேஜாவின் (42) அதிரடி ஆட்டத்தாலும் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 318 ஓட்டங்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி ஜடேஜா (5 விக்கெட்), அஸ்வின் (4 விக்கெட்) ஆகியோரின் சுழலில் 262 ஓட்டங்களில் சுருண்டது.பின்னர் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 5 விக்கெட்டுக்கு 377 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. முரளி விஜய் (76), புஜாரா (78), ரஹானே (40), ரோஹித் சர்மா (68), ஜடேஜா (50) ஆகியோர் சிறப்பாக ஆடினர்.

இதனால் நியூசிலாந்து அணிக்கு 434 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.நேற்றைய 4வது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 94 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.

இந்நிலையில் கடைசி நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அஸ்வினின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 236 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ரோஞ்சி 80 ஓட்டங்களும், சாண்ட்னர் 71 ஓட்டங்களும் எடுத்தனர்.

சுழலில் மிரள வைத்த அஸ்வின் 6 விக்கெட்டுகளை அள்ளினார். சமி 2 விக்கெட்டையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.இதனால் இந்தியா 197 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்று 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: