மெஸ்ஸி இல்லை!

Friday, September 23rd, 2016

அத்லெட்டிகோ மட்ரிட்டுடன் நேற்று வியாழக்கிழமை (22) அதிகாலை இடம்பெற்ற போட்டியில், அடிவயிற்றுப் பகுதியில் காயமடைந்த லியனல் மெஸ்ஸி, மூன்று வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

தடுப்பாட்டக்காரரான டியகோ கோடினிடமிருந்து தடுப்பினை எதிர்கொண்டமையினையடுத்தே, குறித்த போட்டியின் 59ஆவது நிமிடத்தில், போட்டியிலிருந்து மெஸ்ஸி விலகியிருந்தார்.

குறித்த போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது இப்போட்டியில், பார்சிலோனாவின் இன்னொரு வீரரான சேர்ஜியோ புஷ்கட்ஸும் காயமடைந்து வெளியேறியிருந்தார்.

எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி இடம்பெறவுள்ள, மன்செஸ்டர் சிற்றியுடனான சம்பியன்ஸ் லீக் போட்டிக்கு மெஸ்ஸி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகையில், பொரிசியா மஞ்சன்கிளப்பாவுக்கெதிரான சம்பியன்ஸ் லீக் போட்டியையும், ஸ்போர்ட்டிங் ஜியோன், செல்டாவிகோவுக்கெதிரான லா லிகா போட்டிகளையும், பெரு, பராகுவேக்கெதிரான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளையும் தவறவிடுகிறார்.

இம்மாத ஆரம்பத்தில், வெனிசுலாவுக்கெதிரான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியை, அடிவயிற்றுப் பகுதி உபாதை காரணமாக தவறவிட்டிருந்தபோதும், இப்பருவகாலத்தில், பார்சிலோனா விளையாடிய அனைத்து லா லிகா போட்டிகளிலும் மெஸ்ஸி விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, றியல் மட்ரிட், வில்லாறியல் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியிலும், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதனால், லா லிகாவில், தொடர்ச்சியாக 17ஆவது போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைக்கும் றியல் மட்ரிட்டின் வாய்ப்பு பறிபோனது.

 BarcelonavReal16Apr14LionelMessiCrying_large

Related posts: