பாகிஸ்தானுடன் விளையாட மறுப்பு: இந்திய பெண்கள் அணி மீது ஐ.சி.சி. நடவடிக்கை!

Saturday, November 26th, 2016
பாகிஸ்தானுடன் விளையாட மறுத்த இந்திய பெண்கள் அணி மீது ஐ.சி.சி. எடுத்த நடவடிக்கைக்கு இந்திய கிரிக்கெட் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போட்டி அட்டவணை ஒப்பந்தத்தின்படி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கடந்த ஆகஸ்டு 1-ந்திகதியில் இருந்து அக்டோபர் 31-ந்திகதிக்குள் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பாகிஸ்தானுடன் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் பாகிஸ்தானுடன் ஆடுவதை இந்தியா தவிர்த்து விட்டது. இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி கூட பாகிஸ்தானுடன் நேரடி போட்டித் தொடரில் விளையாடி 4 ஆண்டுகள் ஆகி விட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தானுடன் ஆடாததால் இந்திய பெண்கள் அணிக்குரிய தரவரிசையில் 6 புள்ளிகளை ஐ.சி.சி அதிரடியாக குறைத்துள்ளது. இதன் மூலம் 2017-ம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. அதே சமயம் மூன்று ஆட்டங்களிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக கருதப்பட்டு 6 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

இரு நாட்டு கிரிக்கெட் சபைகள் சமர்பித்த அறிக்கையை கவனமாக பரிசீலித்து இந்த முடிவுக்கு வந்ததாக ஐ.சி.சி. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் தொடரில் பங்கேற்க முடியாமல் போனதற்கு இந்திய கிரிக்கெட் சபை சொன்ன காரணம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஐ.சி.சி.யின் செயல் இந்திய கிரிக்கெட் சபையை கொந்தளிக்க வைத்துள்ளது. இத்தனைக்கும் ஐ.சி.சி.யின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஷசாங் மனோகர் இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் சபையின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘அண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய இராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்தனர். இத்தகைய சூழலில் அவர்களுடன் விளையாடுவது என்பது நமது வீரர்களின் தியாகத்தை அவமதிப்பது போன்று ஆகி விடும். அது மட்டுமின்றி தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்பது ஐ.சி.சி. தலைவருக்கு தெரியும். இதை எல்லாம் தெரிந்தும் இந்திய பெண்கள் அணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.

பாகிஸ்தான் அணியுடன் விளையாட வைக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. பெண்கள் அணி விளையாடினால் அதன் பிறகு ஆண்கள் அணியும் விளையாட வேண்டும் என்று சொல்வார்கள். அது இப்போதைக்கு நடக்காது. இந்திய பெண்கள் அணி மீதான நடவடிக்கையை ஐ.சி.சி. திரும்ப பெறாவிட்டால் அவர்களுக்கு ஆதரவாக நிற்பதுடன், இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்திய ஆண்கள் அணி புறக்கணிக்க நேரிடும்’ என்றார்.

90col142942576_5045676_24112016_aff_cmy

Related posts: