இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் வழங்கப்படவில்லை – ICC

Saturday, July 4th, 2020

2011 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான தகுதியான விசாரணையை ஆரம்பிப்பதற்கு தங்களுக்கு எந்தவொரு ஆதாரமும் வழங்கப்படவில்லை என சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்துள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் ஒழிப்பு பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஸல் Alex Marshall இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், 2011 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக கண்டறியப்படாதமையினால், அது தொடர்பான விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த குற்றச்சாட்டு தொடர்பாக, விளையாட்டில் இடம்பெறும் மோசடிகள் குறித்து விசாரிக்கும் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், அதனை முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

2011 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த மஹிந்தானந்த அளுத்கமகே குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக விளையாட்டில் இடம்பெறும் குற்றங்களை விசாரிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சின் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது.

இதற்கமைய, நாவலப்பிட்டியில் உள்ள மஹிந்தானந்த அளுத்கமகேவின் இல்லத்திற்கு கடந்த மாதம் 24 ஆம் திகதி சென்ற அந்தப் பிரிவு, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தது.

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்களான அரவிந்த டி சில்வா மற்றும் குமார் சங்கக்கார, உபுல் தரங்க ஆகியோரிடமும் அந்த விசாரணைப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்திருந்தது.

இந்த நிலையில், இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன குறித்த விசாரணைப் பிரிவில் நேற்று முன்னிலையானர்.

எனினும், தன்னிடம் வாக்குமூலம் பதிவுசெய்யவில்லை என விளையாட்டுத்துறை குற்றங்களை விசாரிக்கும் விசாரணைப் பிரிவில் இருந்து வெளியேறிய பின்னர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கட் வீரர் மஹேல ஜயவர்தனவை நேற்றைய தினம் அழைப்பதற்கு எதிர்பார்க்கவில்லை என்றும், பிரிதொரு தினத்தை அதற்காக வழங்குவதாகவும் அந்த விசாரணைப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

ஆனால், தாம் முன்னிலையாக வேண்டியதில்லை என தமக்கு எந்த தகவலும் வழங்கப்படாத நிலையிலேயே தாம் அங்கு சென்றதாக மஹேல ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

இதேநேரம், குறித்த விடயம் தொடர்பாக நேற்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, காவல்துறை பேச்சாளர் நியாயமற்ற கருத்தை வெளியிட்டுள்ளதாகவும், அது தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கோரியதாக தெரிவித்துள்ளார்.

விளையாட்டு வீரர்களுக்கு அதில் தொடர்பு இல்லை என தாம் கூறியிருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரை அந்த விசாரணைப் பிரிவு விசாரணைக்கு அழைத்தமை எந்த அடிப்படையிலானது என்பது தனக்க தெரியாது என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் தவறான விசாரணையை ஆரம்பித்து, சிக்கில் சிக்கிக் கொண்ட நிலையில், விசாரணைக்கு தகவல் இல்லை என அதனை நிறைவு செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: