பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி!

Wednesday, July 24th, 2019

பாகிஸ்தான் மண்ணில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாட உள்ள நிலையில், பாதுகாப்பு குறித்து ஆராய இலங்கை அதிகாரிகள் பாகிஸ்தான் செல்ல உள்ளனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. லாகூர் மைதானத்திற்கு இலங்கை வீரர்கள் பேருந்தில் சென்றபோது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 8 பேர் பலியான நிலையில், இலங்கை வீரர்கள் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதன் காரணமாக பாகிஸ்தான் சென்று விளையாட முக்கிய அணிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக இதே நிலை தொடருகிறது. இந்நிலையில், இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது.

பாகிஸ்தான் இந்த தொடரை நடத்துவதால், தங்கள் நாட்டில் இதனை நடத்த வேண்டும் என்று விரும்புகிறது. இந்த டெஸ்ட் தொடர் ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் கீழ் வருகிறது. சமீபத்தில் லண்டனில் நடந்த ஐ.சி.சி பொதுக்கூட்டத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பாகிஸ்தான் – இலங்கை தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு குறித்து ஆராய அதிகாரிகளை அனுப்ப முடிவு செய்துள்ளது.

Related posts: