பங்களாதேஷ் மீது பாகிஸ்தான் பாய்ச்சல்!

Sunday, April 30th, 2017

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்களாதேஷில் சென்று விளையாட இருக்கும் தொடர் தள்ளிப் போன விவகாரத்தில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணி ஜூலை, ஆகஸ்ட் மாதம் வங்காள தேசம் சென்று இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட இருந்தது. இந்த தொடருக்குப் பதிலாக பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.

பாகிஸ்தான் நாட்டில் 2009-ம் ஆண்டு இலங்கை அணி சுற்றுப் பயணம் செய்திருந்தபோது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன்பின் எந்தவொரு நாடும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. சிம்பாப்வே அணி மட்டும் 2015-ம் ஆண்டு கடுமையான பாதுகாப்பிற்கிடையே டி20 தொடரில் விளையாடியது.

தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டி பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்றது. மேலும், ஐ.சி.சி. தலைவர் ஒருவர் பாகிஸ்தான் மண்ணில் விரைவில் சர்வதேச போட்டிகளை பார்க்கலாம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில்தான் பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் சொந்த நாட்டிற்கு வரவழைக்க முயற்சி செய்தது. இந்நிலையில் துபாயில் ஐ.சி.சி. பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் – பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது இருநாட்டு அதிகாரிகளும் பேசிக்கொண்டனர். அப்போது, பாதுகாப்பு அச்சம் காரணமாக, பாகிஸ்தான் வந்து விளையாடுவதற்கு வங்காளதேச அணி தயாராக இல்லை என்பதால், இந்த தொடரை ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷகாரியார் கான் கூறுகையில் ‘‘தொடர் தள்ளிப்போகியுள்ளது. ஆனால், அவர்களுக்கு எதிராக நிச்சயம் விளையாடுவோம். 2012 மற்றும் 2015-ல் நாங்கள் பங்களாதேஷ் சென்று விளையாடினோம். அப்போது வங்காள தேசம் எங்கள் நாட்டில் வந்து விளையாடவில்லை. ஆகவே, பங்களாதேஷ் அணி மற்ற விஷங்கள் குறித்து விவாதம் செய்து, சிறந்த முடிவை எடுப்பார்கள் என்ற நம்புகிறேன்’’ என்றார்.

2015-ல் பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் சென்று விளையாடாததற்காக 3 லட்சத்து 25 ஆயிரம் டொலர் வருவாய் இழப்பீடு தரவேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கேட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பங்களாதேஷ் தொடரை ஒத்திவைத்திருக்கலாம்.

Related posts: