அவுஸ்திரேலியாவை மிரட்டிய பாகிஸ்தான்!

Friday, October 26th, 2018

அவுஸ்திரேலியாவுடனான முதல் டி20 போட்டியில், பாகிஸ்தான் அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று அபுதாபியில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் பஹார் ஜமான் ஆகியோர் களமிறங்கினர். ஜமான் 14 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஹபீஸ் மற்றும் பாபர் இருவரும் அதிரடியில் இறங்கினர்.

ஹபீஸ் 30 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்து ஆர்கி ஷார்ட் பந்துவீச்சில் அவுட் ஆனார். அதன் பின்னர், அவுஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ டை மற்றும் ஸ்டான்லேக் ஆகியோரின் அபார பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

எனினும், தொடக்க வீரர் பாபர் அசாம் ஒருபுறம் போராடி அரைசதம் கடந்தார். 9வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹசன் அலி அதிரடியாக 17 ஓட்டங்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்கள் எடுத்தது.

இறுதிவரை களத்தில் இருந்த பாபர் 55 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் எடுத்தார். அவுஸ்திரேலிய தரப்பில் ஸ்டான்லேக் மற்றும் ஆண்ட்ரூ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் வந்த அதிரடி வீரர் மேக்ஸ்வெலும் 2 ஓட்டங்களிலேயே அவுட் ஆக, அவுஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் சரியத் தொடங்கின.

எனினும், கால்டர் நைல் மட்டும் 34 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தானின் மிரட்டல் பந்துவீச்சினால் 16.5 ஓவர்களில் 89 ஓட்டங்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் தரப்பில் இமாது வாசிம் 3 விக்கெட்டுகளும், அஷ்ராப் மற்றும் ஷஹீன் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related posts: