தரமிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை – அலஸ்டெயர் குக்!
Wednesday, November 2nd, 2016
பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்து, தொடரை 1-1 என சமப்படுத்திக் கொண்ட இங்கிலாந்து அணித் தலைவர் அலஸ்டெயர் குக், இங்கிலாந்து அணியில், உலகத்தரமிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை என ஏற்றுக் கொண்டுள்ளார்.
273 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, முதலாவது விக்கெட்டுக்காக 100 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும், பின்னர் விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்து, 164 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தது.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்த அலஸ்டெயர் குக், “240 என்பது, சிறப்பான இலக்காக இருக்குமென எண்ணினேன். அவர்கள், 30 ஓட்டங்கள் அதிகமாகப் பெற்றார்கள். எங்களுக்கு 4 அல்லது 5 பிடி வாய்ப்புகள் கிடைத்தன. இலகுவான வாய்ப்புகளன்று, ஆனால் நீங்கள் பிடிக்க வேண்டிய பிடிகள். அந்த மோசமான நிலையை, பிடியொன்றைத் தவறவிட்டு, நானே ஆரம்பித்தேன்” என்று குறிப்பிட்டார்.
பங்களாதேஷ் அணி சிறப்பாக விளையாடியது என்பதை அவர் ஏற்றுக் கொண்ட போதிலும், தனது பந்துவீச்சாளர்கள் குறித்தும் விமர்சனங்களை வெளிப்படுத்தத் தவறவில்லை. “நாங்கள் சிறப்பாகப் பந்துவீசவில்லை. ஆம், அத்துடன் அவர்களது சுழற்பந்து வீச்சாளர்கள், எங்களுடைய சுழற்பந்து வீச்சாளர்களை விடச் சிறப்பாகப் பந்துவீசினார்கள். எங்களிடம், உலகத்தரமிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை என்பதை, நாங்கள் மறைக்க முடியாது” என்றார்.
இந்தத் தொடரைத் தொடர்ந்து, இந்தியாவில் இடம்பெறவுள்ள 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணி, பங்களாதேஷில் இடம்பெற்ற தோல்விகளின் வடுக்களால் பாதிக்கப்படுமென்பதையும், குக் ஏற்றுக் கொண்டார்.
அதேபோல், முன்னேறிவரும் பங்களாதேஷ் அணிக்கும், தனது பாராட்டுகளை வெளிப்படுத்த அவர் தவறவில்லை. “கள நிலைமைகள், மிகவும் கடினமாக இருந்தன. ஆனால், அவை தொடர்பில் என்னிடம் முறைப்பாடுகள் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட் என்பது அது தான். பங்களாதேஷ் அணி, இந்த வெற்றிக்கு மிகவும் உரித்துடையது. அவர்கள், சிறப்பான முன்னேற்றங்களைப் பெற்றுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

Related posts:
|
|
|


