அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

Monday, March 28th, 2016

டி20 உலகக்கிண்ண போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

அவுஸ்திரேலிய அணியில் ஆரம்ப ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆரோன் பின்சும், கவாஜாவும் அதிரடியாக ஆடினர், பும்ரா வீசிய 2-வது ஓவரில் கவாஜா நான்கு பவுண்டரிகள் அடித்தனர்.

அஸ்வின் வீசிய 4-வது ஓவரில் பின்ச் 2 சிக்ஸ் அடிக்க அவுஸ்திரேலியாவின் ஸ்கோர் அதிரடியாக  உயர்ந்து 4 ஓவரில் 50 ஓட்டங்களை தொட்டது.

5-வது ஓவரில் நெஹ்ரா கவாஜாவை 26 ஓட்டங்களில் வீழ்த்தினார். அதன் பிறகு இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசி ஓட்டங்களின் வேகத்தை கட்டுப்படுத்தினார்கள்.

வார்னரை 6 ஓட்டங்களில் அஸ்வின் விழ்த்தினார். அணித்தலைவர் சுமித்தை 2 ஓட்டங்களில் யுவராஜ் வீழ்த்த அவுஸ்திரேலியா தடுமாற ஆரம்பித்தது.பின்ச் மற்றும் மேக்ஸ்வெல் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார்கள். ஆனால் பின்ச் 43 ஓட்டங்களில் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்.மேக்ஸ்வெல் 31 ஓட்டங்களில் பும்ரா பந்தில் போல்ட் ஆனார்.

இறுதியில் அவுஸ்திரேலியா 6 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அற்புதமாக பந்து வீசிய நெஹ்ரா 4 ஓவர்கள் வீசி 20 ஓட்டங்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

பாண்டிய இரண்டு விக்கெட்டும், யுவராஜ், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

இந்தியா சார்பில் ஆரம்ப ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகிய இருவரும் 12 மற்றும் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

எனினும் கோஹ்லி நிலைத்து நின்று அதிரடியாக ஆடினார். யுவராஜ் சிங்கும் தனது பொறுப்பை உணர்ந்து ஆடினார்.

இந்நிலையில் 21 ஓட்டங்கள் எடுத்த நிலையில் யுவராஜ் ஆட்டமிழந்தார். பின்னர் டோனி களமிறங்கினார். 3 ஓவர்களுக்கு 39 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அதிரடியாக ஆடிய கோஹ்லி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் டோனி பவுண்டரி அடித்து அணியை வெற்றிபெற வைத்தார்.

இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்கள் எடுத்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது

Related posts: