டோனியுடன் சேர்ந்த கோஹ்லி!

Sunday, July 9th, 2017

ஒரு தொடரில் அனைத்து போட்டிகளிலும் நாணய சுழற்சியில் தோல்வியடைந்து, அதிர்ஷ்டமில்லா அணித்தலைவர்கள் பட்டியலில் டோனியுடன் சேர்ந்து கொண்டார் விராட் கோஹ்லி.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.

இதில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா தொடரை 3-1 எனக் கைப்பற்றியது. ஒரு போட்டி மழையினால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

இந்த தொடரின்போது நாணயசுழற்சியில் ஐந்து போட்டிகளிலும் விராட் கோஹ்லி தோல்வியடைந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணித்தலைவர் ஹோல்டர் நாணயம் சுண்ட, விராட் கோஹ்லி ‘டெய்ல்’ கேட்டார். ஆனால், ஐந்து முறையும் ‘ஹெட்’தான் விழுந்தது.

இதன்மூலம் ஒரு தொடர் முழுவதும் நாணயசுழற்சியில் தோற்ற நான்காவது இந்திய அணித்தலைவர் என்ற மோசமான சாதனையை கோஹ்லி பெற்றுள்ளார்.

இதற்கு முன் டோனி, ரகானே மற்றும் கவாஸ்கர் ஆகியோர் இந்த மோசமான சாதனையை பெற்றுள்ளனர். 2011-ம் ஆண்டு இங்கிலாந்து இந்தியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

இந்த தொடரில் டோனி ஐந்து போட்டிகளிலும் நாணயசுழற்சியில் தோல்வியடைந்தார்.

ரகானே ஜிம்பாப்வே அணிக்கெதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நாணயசுழற்சியில் தோற்றுள்ளார். கவாஸ்கர் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 1984-85-ல் அனைத்து போட்டிகளிலும் நாணயசுழற்சியில் தோற்றுள்ளார்.

விராட் கோஹ்லி இதுவரை 30 போட்டிகளில் அணித்தலைவராக பணியாற்றியுள்ளார். இதில் 13 போட்டிகளில்தான் நாணயசுழற்சியில் வெற்றி பெற்றுள்ளார். டோனி 199 போட்டிகளில் அணித்தலைவராக பணியாற்றியுள்ளார். இதில் 97 முறைதான் நாணயசுழற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.

Related posts: