சம்பியன்ஷிப் போட்டியைத் தக்கவைத்தார் ஹமில்டன்!

Tuesday, November 15th, 2016

கடும் மழையினுள் விபத்துக்கள் நிறைந்து குழப்பகரமானதாகக் காணப்பட்ட பிரேஸிலியன் கிரான்ட் பிறிக்ஸில் அபாரமான செலுத்துகையை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற தற்போதைய போர்மியுலா வண் சம்பியனான மெர்சிடிஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், இவ்வருட போர்மியுலா வண் சம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டியை அபுதாபிக்கு கொண்டு சென்றுள்ளார்.

உயர் வேக விபத்துகள், இரண்டு முறை நிறுத்தப்பட்ட, ஐந்து தடவைகள் வேகம் மட்டுப்படுத்தப்பட்டவாறு இடம்பெற்ற பந்தயத்தில், இவ்வருடத்தின் ஒன்பதாவது வெற்றியை ஹமில்டன் பெற்றார். இந்த வெற்றியின் மூலம், தனக்கும், இப்பந்தயத்தில் இரண்டாமிடம் பெற்ற சக மெர்சிடிஸ் அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான நிக்கோ றொஸ்பேர்க்குக்குமிடையிலான புள்ளிகள் வித்தியாசத்தை 12 ஆக குறைத்துக் கொண்டார்.

எவ்வாறெனினும், அபுதாபியில் எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள பந்தயத்தை ஹமில்டன் வென்று, றொஸ்பேர்க் மூன்றாமிடத்தைப் பெற்றால், றொஸ்பேர்க்கே இவ்வருடத்துக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப்பை வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடினமான நிலைகளில் இடம்பெற்ற இப்பந்தயத்தில், ஏனைய அனைவரையும் விட வேகமாகப் பயணித்து  முன்னிலையில் இருந்த ஹமில்டன், இரண்டு தடவை மீள ஆரம்பிக்கும்போதும், றொஸ்பேர்க்குக்கும் தனக்குமிடையில் அதிக இடைவெளியை ஏற்படுத்தியதோடு, ஒரு கட்டத்தில் 18 செக்கன்கள் முன்னிலை பெற்றிருந்தார். எனினும், மேலுமோரு தடவை வேகம் மட்டுப்படுத்தப்பட்டபோது, அவரின் முன்னிலை இல்லாமற் போயிருந்தது.

இப்பந்தயத்தில் வெற்றி பெற்றதன் மூலம், தனது வாழ்நாளில் 52ஆவது வெற்றியைப் பெற்ற ஹமில்டன், அதிக வெற்றிகள் பெற்றவர்கள் பட்டியலில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார். 91 வெற்றிகளைப் பெற்று, முதலிடத்தில் ஷூமாக்கர் உள்ளார்.

1_1997010f copy

Related posts: