கெயில், ஹெட்மையர் அதிரடியால் மேற்கிந்திய தீவுகள் வெற்றி!

Thursday, March 8th, 2018

உலகக்கிண்ண குவாலிபையர் தொடரில் கிறிஸ் கெய்ல் மற்றும் ஹெட்மையரின் அதிரடி சதங்களால் மேற்கிந்திய தீவுகள் அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது.

ஐசிசி உலகக்கிண்ண குவாலிபையர் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி நேற்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொண்டது. நாணயசுழற்சியை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தடியது.

அதன்படி கிறிஸ் கெய்ல், லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லெவிஸ் 31 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹெட்மையர் களம் இறங்கினார். இவரும் கிறிஸ் கெய்லும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

ஹெட்மையர் 93 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் 127 ஓட்டங்களும், கிறிஸ் கெய்ல் 91 பந்தில் 7 பவுண்டரி, 11 சிக்சருடன் 123 ஓட்டங்களும் குவித்தனர். இருவரின் ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 357 ஓட்டங்கள் குவித்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி சார்பில் ஹயாத், முஸ்தபா, ஹைடர், ரசா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதையடுத்து, 358 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக முஸ்தபாவும், சுரியும் களமிறங்கினர். மேற்கிந்திய தீவுகள் ஹோல்டரின் அபாரமான பந்துவீச்சில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர்கள் நிலைகுலைந்தனர்.

அந்த அணி 69 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன்பின் இறங்கிய ரமீஸ் ஷசாத் நிலைத்து நின்று ஆடினார். அவருக்கு அன்வர் ஓரளவு ஒத்துழைப்பு தந்தார். இதனால் அந்த அணி ஓரளவு ரன் குவிப்பில் ஈடுபட்டது.

ஆனாலும், அன்வர் 64 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் முப்தி 34 பந்தில் 45 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதிவரை போராடிய ஷசாத் 107 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரியுடன் 112 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், ரோச் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து, 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றது.

Related posts: