ஏமாற்றிய இலங்கை கப்டன் கண்டு கொள்ளாத நடுவர்கள்!

Tuesday, November 21st, 2017

இலங்கை – இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகின்றது. இதில் நேற்று முன்தினம் நடந்த மூன்றாவது நாள் ஆட்டத்தில் சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று நடந்திருக்கின்றது.

இலங்கை அணி கப்டன் தினேஷ் சந்திமல் இந்தச் சர்ச்சைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அதன்படி இவர் பந்தை தடுப்பது போல செயல்பட்டு இந்திய துடுப்பாட்ட வீரர்களை ஏமாற்றியிருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் விதிகளின் படி இது மிகவும் பெரிய தவறாகும். ஆனால் இதை களத்தில் இருந்த நடுவர்கள் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்துள்ளனர். தற்போது இது பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

மைதானத்தில் எதிரணியை குழப்பி விக்கெட் எடுக்கும் சில ஸ்டைல்களுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதித்து இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் விதி 41.5 ன் படி எதிரணியைச் சேர்ந்தவரை வார்த்தைகள் மூலமாகவோ செயல்கள் மூலமாகவோ குழப்பி விக்கெட் எடுப்பது, ஓட்டம் எடுப்பது தவறு என கூறப்படுகிறது. பேக் பீல் டிங் (போலி களத்தடுப்பு) என அழைக்கப்படும் இந்தவித விளையாட்டுக்கு அபராதமாக எதிரணிக்கு 5 ஓட்டங்கள் வழங்கப்படும் எனவும் விதியில் இருக்கிறது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நேற்று முன்தினம் நடந்த மூன்றாவது நாள் டெஸ்ட் போட்டியில் தினேஷ் சந்திமல் போலி களத்தடுப்பு செய்திருக்கிறார். புவனேஷ்வர குமார் பவுண்டரி எல்லையை நோக்கி அடித்த பந்தை இவர் எடுப்பதற்காக ஓடினார். ஆனால் பந்தை எடுக்காமலே எடுத்தது போல இவர் செய்கை செய்திருக்கிறார். மேலும் அதை விக்கெட் காப்பாளரிடம் தூக்கி எறிவது போலவும் நடித்திருக்கின்றார்.

இதன் காரணமாக இரண்டாவது ஓட்டத்திற்கு செல்ல இருந்த புவனேஷ்வர் குமார் ஒரு ஓட்டத்துடன் நின்று விட்டார். அதன் பின்பே சந்திமல் பந்தை எடுத்து பொறுமையாக வீசினார். இதனை கவனித்துக் கொண்டிருந்த நடுவர் எதுவும் சொல்லாமல் இருந்திருக்கின்றார். மேலும் தினேஷ் சந்திமலின் முகத்தை சில நிமிடம் பார்த்து விட்டு ஏதும் எச்சரிக்கை கூட செய்யாமல் சென்றிருக்கின்றார்.

இதை பார்த்த கோஹ்லி உடனே கோபமடைந்தார். இது போன்ற முறைக்கு 5 ஓட்டங்கள் அபராதமாக எதிரணிக்கு வழங்கப்படும் இதன்படி இந்திய அணிக்கு 5 ஓட்டங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடுவர் அப்படி செய்யாததால் கோஹ்லி கோபம் அடைந்தார். ஓய்வு அறையிலிருந்து கத்தினார். பின் போட்டி முடிந்த போது நடுவரிடம் இது குறித்து முறையிட்டார். ஆனால் அந்த 5 ஓட்டங்கள் வழங்கப்படவேயில்லை.

Related posts: