இரசிகர்களின் எதிர்பார்ப்புடன் முதல் போட்டியில் இலங்கை!

Saturday, June 1st, 2019

உலக கிரிக்கெட் இரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த கிரிக்கெட் உலகக் கிண்ணம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 2015ம் ஆண்டு உலகக் கிண்ண தொடருக்கு பின்னர் ஒவ்வொரு அணிகளும் இந்த மாபெரும் கிரிக்கெட் தொடருக்கான தயார்படுத்தல்களில் கடந்த 4 வருடங்களாக ஈடுபட்டு வந்திருந்தன.

இப்போது உலகக் கிண்ணம் ஆரம்பித்துவிட்டது. சர்வதேச அணிகள் தங்களை தயார்படுத்தியது போன்று இலங்கை அணி பல்வேறு வகையான மாற்றங்களை ஏற்படுத்தி, தற்போது இம்முறை உலகக் கிண்ண தொடரில் தங்களுடைய முதல் போட்டியில்  நாளைய தினம் (01) நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை அணி முதல் பயிற்சிப் போட்டியில் விளையாடிய கார்டிப் ஷோப்பியா கார்ட்ன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த நான்கு வருடங்களாக அணித் தலைமைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திவந்த இலங்கை அணி இறுதியாக தமது டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்னவிடம் தலைவர் பதவியை உலகக் கிண்ண தொடருக்காக ஒப்படைத்துள்ளது. 2015ம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் ஒருநாள் போட்டியொன்றில் விளையாடிய இவர், அதன் பின்னர் எந்தவித சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருக்கவில்லை. எனினும், இப்போது உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியின் தலைவர் என்ற பொறுப்புடன் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை ௲ நியூசிலாந்து அணிகளது தற்போதைய நிலையை பார்க்கும் போது, இலங்கை அணியை விட நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இலங்கை அணி இறுதியாக விளையாடிய 15 ஒருநாள் போட்டிகளில், 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. இதில், இறுதியாக நடைபெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான ஒரு போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை, அதற்கு முன்னர் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-5 என தோல்வியடைந்து வைட்வொஷ் ஆகியிருந்தது.

எனினும், நியூசிலாந்து அணியை பார்க்கும் போது, அந்த அணி இறுதியாக ஆடிய 11 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்றுள்ளதுடன், 4 போட்டிகளில் மாத்திரமே தோல்வியை தழுவியுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை அந்த அணி 3-0 என கைப்பற்றியதுடன், பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரையும் 3-0 என கைப்பற்றியிருந்தது. இதில், இந்திய அணிக்கு எதிரான தொடரை நியூசிலாந்து அணி, 1-4 என இழந்திருந்த போதும், உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் இந்திய அணியை தோல்வியடையச் செய்து பலமான அணியாக தங்களை காட்டியுள்ளது.

நியூசிலாந்து அணியை பொருத்தவரை, அனுபவம் மிக்க துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என சம பலம் கொண்ட அணியாக காணப்படுகின்றது. ஆரம்பத்தை பொருத்தவரை மார்ட்டின் கப்டில் மற்றும் கொலின் மன்ரோ என அதிரடியும், அனுபவம் கலந்த வீரர்கள் உள்ளனர்.

மத்திய வரிசையில் கேன் வில்லியம்சன், ரொஸ் டெய்லர், கொலின் டி கிரெண்டோம் மற்றும் டொம் லேத்தம் ஆகிய அனுபவம் மிக்க துடுப்பாட்ட வீரர்கள் அணியின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்துவதுடன், பந்து வீச்சை ட்ரென்ட் போல்ட் மற்றும் டிம் சௌதியுடன் இணைந்து லொக்கி பேர்கஸன் பலப்படுத்தவுள்ளார். அதேநேரம், சுழல் பந்துவீச்சை இஷ் சோதி வழிநடத்தவுள்ளதுடன், அவருடன் இணைந்து மிச்சல் சென்ட்னர் சுழற்பந்தையும், துடுப்பாட்டத்தையும் பலப்படுத்துகிறார்.

இலங்கை அணியின் அனுபவத்தை பார்க்கும் போது, லஹிரு திரிமான்ன மற்றும் ஜீவன் மெண்டிஸின் வருகைகள் வரவேற்க தக்கதாகவுள்ளது. எனினும், இவர்கள் இருவரும் சோபிக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர். அதேநேரம், அனுபவம் என்ற ரீதியில் மெதிவ்ஸ் மற்றும் குசல் பெரேரா இலங்கை அணியின் துடுப்பாட்ட தூண்களாக பார்க்கப்படுவதுடன், இளம் குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவுடன் இணைந்து ஓட்ட எண்ணிக்கைக்கு வலுவளிக்க வேண்டும்.

இதேவேளை, ஒவ்வொரு உலகக் கிண்ணத்திலும் இலங்கை அணிக்கு பந்துவீச்சாளர்கள் சிறந்த பங்களிப்பினை வழங்கியுள்ளனர். அந்த எதிர்பார்ப்புடன் அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர். முக்கியமாக உலகக் கிண்ணங்களில் 2 ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள லசித் மாலிங்க அணியின் பந்துவீச்சை முன்நின்று வழிநடத்த வேண்டும் என்துடன், லக்மால், பிரதீப் மற்றும் இசுரு உதான ஆகியோர் அவருக்கு உதவியளிக்க வேண்டும்.

இதில் சகலதுறை வீரராக இருக்கும் திசர பெரேராவும், குழாத்தில் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக இருக்கும்  ஜெப்ரி வெண்டர்சே ஆகியோரின் பங்குகள் அணிக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு வீரர்களும் இந்த உலகக் கிண்ணத்தில் முக்கிய பங்காக பார்க்கப்படுவதுடன், கடந்த கால தோல்விகளை மறந்து இந்த முதல் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றியை கொடுப்பார்களாயின், இந்த உலகக் கிண்ணத் தொடரில் அணி நம்பிக்கையுடன் முன்னேறும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.

இரு அணிகளதும் ஒருநாள் போட்டி மோதல்கள்

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இதுவரை, 98 ஒருநாள் போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தியுள்ளன. இந்த போட்டிகளில் நியூசிலாந்து அணி 48 போட்டிகளிலும், இலங்கை 41 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இதில், 8 முடிவற்ற போட்டிகள் பதிவாகியுள்ளதுடன், ஒரு போட்டி சமனிலையடைந்துள்ளது. ஒருநாள் தரவினை பார்க்கையில், நியூசிலாந்து அணி, இலங்கை அணியை விட சற்று முன்னோக்கி இருந்தாலும், உலகக் கிண்ண போட்டிகளின் முடிவுகள் இலங்கைக்கு சாதகமாக உள்ளது.

இந்த இரண்டு அணிகளும் 10 உலகக் கிண்ணப் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இலங்கை அணி 6 வெற்றிகளையும், நியூசிலாந்து அணி 4 வெற்றிகளையும் பெற்றுள்ளன. இதன்படி, இந்த முறையும் தங்களுடைய முன்னிலையை இலங்கை அணி நீடிக்குமா? என்பதே கேள்வியாக முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு வீரர்கள்

அஞ்செலோ மெதிவ்ஸ் (இலங்கை)

இலங்கை அணியில் அனுபவம் என்ற ரீதியிலும், துடுப்பாட்டம் என்ற ரீதியிலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரராக அஞ்செலோ மெதிவ்ஸ் உள்ளார். மெதிவ்ஸ் உபாதையில் அவதிப்பட்டு வந்தாலும், அவருடைய துடுப்பாட்டம் சிறப்பாகவே உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களை (உலகக் கிண்ண குழாத்தில் உள்ள வீரர்கள்) குவித்துள்ள துடுப்பாட்ட வீரராக உள்ள மெதிவ்ஸ், 19 இன்னிங்ஸ்களில் 466 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

உபாதையிலிருந்து திரும்பி ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் மெதிவ்ஸ் ஓட்டங்களை குவிக்காவிட்டாலும், இறுதியாக தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் 64 ஓட்டங்களை பெற்று அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளார். இந்த நிலையில், நாளைய போட்டியில் மெதிவ்ஸின் துடுப்பாட்டம் அணியின் போட்டி முடிவில் அதிகம் செல்வாக்கு செலுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)

நியூசிலாந்து அணியை பொருத்தவரையில், எதிர்பார்க்கப்படும் வீரராக கேன் வில்லியம்சன் உள்ளார். அணித் தலைமையிலும் சரி, துடுப்பாட்டத்திலும் சரி அணியை சிறப்பாக வழிநடத்தக்கூடியவர் வில்லியம்சன். இலங்கை அணிக்கு எதிராக இதுவரையில் 18 இன்னிங்ஸ்களில் 685 ஓட்டங்களை குவித்துள்ளார். அதேநேரம், இவரது ஒருநாள் துடுப்பாட்ட சராசரி 45.90 ஆக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: