மெஸ்ஸியின் சாதனை உதை: அரையிறுதிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா!

Monday, June 20th, 2016

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் மெஸ்ஸியின் சாதனை கோலுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது அர்ஜென்டினா.

அமெரிக்காவில் 45வது கோபா அமெரிக்க கால்பந்து தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் 14 முறை சாம்பியனான அர்ஜென்டினா – வெனிசூலா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா வீரர்களின் தாக்குதல் ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் வெனிசூலா வீரர்கள் திணற தொடங்கினர்.

8வது மற்றும் 28வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் கோன்சாலோ ஹிகுயின் 2 கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2வது பாதி ஆட்டத்திலும் அதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணிக்கு, 60வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி அணியின் 3வது கோலை அடித்தார்.

பனாமா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 கோல்கள் அடித்த மெஸ்ஸி இந்த கோல் மூலம் தனது 4வது கோலை பதிவு செய்தார். இந்த கோல் மூலம் அதிக கோல்கள் அடித்து இருந்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா சாதனையை சமன் செய்தார். பாடிஸ்குடா 78 சர்வதேச போட்டிகளில் விளையாடி 54 கோல்கள் அடித்துள்ளார். அர்ஜென்டினா நாட்டு அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரராக அவர் திகழ்ந்தார்.

மெஸ்ஸி 2005ம் ஆண்டு முதல் தற்போது வரை 111 ஆட்டத்தில் ஆடி 54 கோல்கள் அடித்துள்ளார். இனிவரும் ஆட்டங்களில் கோல் அடிப்பதன் மூலம் அவர் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் என்ற சாதனை படைப்பார்.

70வது நிமிடத்தில் வெனிசூலா அணிக்கு ரான்டன் ஆறுதல் கோல் அடித்தார். மறு வினாடியே (71வது நிமிடம்) அர்ஜென்டினா வீரர் லமேலா 4வது கோலை அடித்தார். முடிவில் அர்ஜென்டினா 4-1 என்ற கணக்கில் வெனிசூலாவை வீழ்த்தியது.

இந்த வெற்றி மூலம் அர்ஜென்டினா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் அமெரிக்காவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் எதிர்வரும் 22ம் திகதி ஹீஸ்டன் நகரில் நடக்கிறது.

இந்தப் போட்டியைத் தொடர்ந்து நடந்த 4வது காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சிலி மெக்சிகோ அணிகள் மோதின. இதில் சிலி அணி கோல் மழை பொழிந்து மெக்சிகோவை பந்தாடி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

சிலி அணி அரையிறுதியில் கொலம்பியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் எதிர்வரும் 23ம் திகதி நடக்கிறது.

Related posts: