ஆசிய வலைபந்தாட்டம் – மலேசியாவை வென்றது இலங்கை!

Thursday, September 8th, 2022

சிங்கப்பூர் ஓ சி பி சி அரினா உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமான பிரதான சுற்றில் மலேசியாவிடம் கடும் சவாலை எதிர்கொண்ட இலங்கை 55 – 53 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது.

போட்டியின் மூன்றாவது கால்மணி ஆட்ட நேர பகுதியல் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய இலங்கை  7  கோல்கள் வித்தியாசத்தில்  ஆட்டத்தை   தன்வசப்படுத்தி வெற்றிபெற்றது.

முதல் சுற்றில் ஏ குழுவில் இந்தியாவையும் பிலிப்பைன்ஸையும் இலகுவாக வெற்றிகொண்டு பிரதான சுற்றில் விளையாட தகுதிபெற்ற நடப்பு ஆசிய சம்பயின் இலங்கைக்கு பிரதான சுற்று இலகுவாக அமையப் போவதில்லை என்பதை மலேசியாவுடனான போட்டி எடுத்துக்காட்டியது.

இந்தப் போட்டியில் முன்களத்திலும் பின்களத்திலும் தவறுகள் இழைக்கப்பட்டதாலேயே மலேசியாவிடம் இலங்கை பலத்த சவாலை எதிர்கொண்டது. எவ்வாறாயினும் மறுபுறத்தில் மலேசியாவும் அவ்வப்போது தவறுகளை இழைத்தமை இலங்கைக்கு சற்று ஆறுதலை கொடுப்பதாக அமைந்தது.

இப் போட்டியின் முதலாவது கால் மணி ஆட்டநேர பகுதியில் 15 – 13 என்ற கோல்கள் கணக்கில் மலேசியா முன்னிலை அடைந்தது.

ஆனால், இரண்டாவது கால் மணி ஆட்டநேர பகுதியில் திறமையாக விளையாடிய இலங்கை 17 – 13 என்ற கோல்கள் கணக்கில் அப் பகுதியை தனதாக்கி இடைவேளையின்போது கோல்கள் நிலையை 30 – 30 என சமப்படுத்தியது.

இடைவேளைக்குப் பின்னர் 3 ஆவது கால் மணி ஆட்ட நேர புகுதியில் 31 ஆவது கோலில் இருந்து அடுத்தடுத்து 6 கோல்களைப் போட்ட இலங்கை ஆட்டத்தை தன்பக்கம் திருப்பியது.

இறுதியில் 3 ஆவது ஆட்ட நேர பகுதியை 15 – 8 என தனதாக்கிய இலங்கை 45 – 38 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை அடைந்தது.

நான்காவது ஆட்ட நேர பகுதியின் ஆரம்பித்தில்  7 கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை முன்னிலையில் இருந்த போதிலும் கடைசி செக்கன்களில் கோல்கள் வித்தியாசம் 2 ஆக குறைந்தது.

கடைசி ஆட்ட நேர பகுதியை 15 – 10 என மலேசியா தனதாக்கிய போதிலும் ஒட்டுமொத்த நிலையில் 55 – 53 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது.

இலங்கை சார்பாக தர்ஜினி சிவலிங்கம் 56 முயற்சிகளில் 53 கோல்களையும் ஹசித்தா மெண்டிஸ் 2 முயற்சிகளில் 2 கோல்களையும் போட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: