ஆகஸ்ட் 01ஆம் திகதி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகள் ஆரம்பம் – ஐ.சி.சி.!

Wednesday, July 31st, 2019

எதிர்வரும் முதலாம் திகதி முதல் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.

மொத்தம் 9 அணிகள் 27 தொடர்கள், 71 டெஸ்ட் போட்டிகள் 2 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் இந்தத் தொடர் நடைபெறவுள்ளது.

இதில் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகள் இறுதிப் போட்டியில் 2021 ஆம் அண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் மோதும். இந்த ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியை ஐ.சி.சி. கடந்த 29 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்தது.

இலங்கை, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளில் பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டுத் தொடர்களில் மொத்தம் 71 டெஸ்ட் போட்டிகள் 2 ஆண்டுகளில் நடைபெறுகிறது.

ஒவ்வொரு அணிகளும் தமது நாட்டில் மூன்று டெஸ்ட் தொடர்களிலும் வெளிநாட்டில் மூன்று டெஸ்ட் தொடர்களிலும் ஆட வேண்டும். தொடரில் குறைந்து இரண்டும், கூடியது ஐந்துமாக போட்டிகளில் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

ஐந்து போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் மோதும் அணிகளுக்கு போட்டி ஒன்றில் வெற்றி பெற்றால் 24 புள்ளிகள் வழங்கப்படும். இரு போட்டிகளை கொண்ட தொடர்களில் ஆடும் அணிக்கு போட்டி ஒன்றில் வெற்றி பெற்றால் 60 புள்ளிகள் வழங்கப்படும்.

இறுதிப் போட்டி சமநிலையானால் அல்லது முடிவின்றி நிறைவுற்றால் இரு அணிகளும் சம்பியன்களாக அறிவிக்கப்படும்.

போட்டிகளை நடத்தும் அந்தந்த நாடுகளின் சபைகளே இந்தப் போட்டிகளை ஏற்பாடு செய்யும். போட்டி நிர்வாகிகள், நடுவர்கள் ஆகியோரை மட்டுமே ஐ.சி.சி. தீர்மானிக்கும். அதே போல் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் விதிமுறைகளின் கீழ் நடைபெறுவதை ஐ.சி.சி. உறுதி செய்யும்.

இந்த டெஸ்ட் சம்பியன் ஷிப் தொடர் ஆகஸ்ட் முதலாம் திகதி தொடங்கி மார்ச் -31- 2021 வரை நடைபெறும். 2ஆவது டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி ஏப்ரல் 2023 வரை நடைபெறும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

இந்த உலக டெஸ்ட் சம்பியன்சிப்பின் முலாவது டெஸ்ட் தொடராக ஆஷெஸ் டெஸ்ட் தொடரில் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

Related posts: