அரை இறுதிவாய்ப்பை பெறுமா இந்தியா?

Saturday, March 26th, 2016
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் உள்ள முன்னணி நகரங்களில் நடைபெற்று வருகிறது.
2007ம் ஆண்டு சாம்பியனான டோனி தலைமையிலான இந்திய ஆரம்ப ஆட்டத்தில் 47 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோற்றது. 2வது போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்திலும், அதை தொடர்ந்து வங்கதேசத்தை 1 ரன்னிலும் வென்றது.
இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்கிறது. மொகாலியில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால்தான் இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற முடியும். தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரைஇறுதிக்கு நுழையுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படும்.
இந்த பிரிவில் இருந்து நியூசிலாந்து அணி ஏற்கனவே அரை இறுதிக்கு நுழைந்து விட்டது. பாகிஸ்தான், வங்கதேச அணிகள் வெளியேற்றப்பட்டுள்ளன. இதனால் இந்த பிரிவில் இருந்து அரைஇறுதிக்கு தகுதிபெறும் மற்றொரு அணி எது என்பது இந்த ஆட்டம் முடிவு செய்யும்.
ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது என்பது இந்தியாவுக்கு சவாலானது. வங்கதேசத்திடம் மயிரிழையில் தோல்வியில் இருந்து தப்பியது. வீரர்கள் அனைவரும் திறமையை நிரூபித்தால்தான் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க முடியும். அந்த அணியை அந்நாட்டு மண்ணில் சமீபத்தில் நடந்த 3 போட்டியிலும் வீழ்த்தி இருந்தது. இதனால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.
மிகவும் முக்கியமான இந்த ஆட்டத்தில் வீராட்கோலி சிறப்பாக ஆடுவது முக்கியமானது. இதேபோல ரோகித்சர்மா, தவானின் தொடக்கம் இன்றும் நன்றாக அமைய வேண்டும்.
கடந்த போட்டியில் மத்தியவரிசையில் சொதப்பிய யுவராஜ்சிங் அதிரடியை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார். ரகானேவுக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். ஆனால் வெற்றி அணி என்ற காரணத்தால் டோனி வீரர்களை மாற்றம் செய்யமாட்டார். மேலும் ஹார்த்திக் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோரும், பந்துவீச்சில் அஸ்வின், நெக்ரா, பும்ரா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
ஆஸ்திரேலியா துடுப்பாட்டம் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 8 ரன்னில் தோற்றது. வங்காளதேசத்தை 3 விக்கெட் வித்தியாசத்திலும், பாகிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.
இந்தியாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதிபெறும் ஆர்வத்துடன் ஆஸ்திரேலியா உள்ளது. அந்த அணியில் துடுப்பாட்டத்தில்  தலைவர் சுமித், வாட்சன், உஸ்மான், குவாஜா நல்ல நிலையில் உள்ளனர். இதுதவிர ஆரோன்பிஞ்ச், மேகஸ்வெல் வார்னர், பல்க்னெர் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.
இரு அணிகளும் அரை இறுதியில் நுழைய கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: