அணியில் இருந்து வெளியேறிய வீரேந்திர சேவாக்!

Monday, November 5th, 2018

கிங்ஸ் லெவன் பஞ்சாப் கிரிக்கெட் அணியில் இருந்து விலகுவதாக, அந்த அணியின் ஆலோசகர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.

ஐ.பி.எல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கு ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் இருந்து வந்தார். வீரர்களை ஏலத்தில் எடுப்பது முதல் அணியை வழிநடத்துவது வரை சேவாக் முக்கிய பங்காற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 160 ஓட்டங்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது. ஆனால், ராகுல்(95) தவிர்த்து மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடாததால், 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில் கிறிஸ் கெய்ல் அவுட் ஆனதும் அணித்தலைவர் அஸ்வின் மூன்றாவது வீரராக களம் கண்டார். ஆனால், அவர் டக்-அவுட் ஆகி வெளியேறினார்.

போட்டி முடிந்ததும் இதுதொடர்பாக சேவாக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பிரீத்தி ஜிந்தா. அவர் கருண் நாயர், மனோஜ் திவாரி ஆகியோரை விட்டுவிட்டு, அஸ்வினை களமிறக்கியது ஏன் என கேள்வியெழுப்பினார்.

இதனால், இருவருக்கும் இடையே பிரச்சனை உருவானது. இதுபோல் ஆடும் லெவனை தேர்ந்தெடுப்பது தொடர்பாக சேவாக்-பிரீத்தி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுவது சகஜம் தான் என்று கூறப்பட்டது.

இதனை உறுதிபடுத்தும் வகையில், கிரிக்கெட் குறித்து பிரீத்தி தன்னிடம் எதுவும் கேட்கக்கூடாது என சேவாக் அணியின் ஏனைய உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஆனால் இதனை மறுத்த பிரீத்தி, தனக்கும் சேவாக்கிற்கும் மோதல் போக்கு இல்லை என்று திட்டவட்டமாக கூறினார்.

இந்நிலையில், பஞ்சாப் அணியின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகுவதாக சேவாக் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

‘எந்த ஒரு நல்ல விடயமும் என்றாவது ஒருநாள் முடிவுக்கு வரும். பஞ்சாப் அணியுடனான எனது தொடர்பும் முடிவுக்கு வந்துவிட்டது. அந்த அணியின் இரண்டு தொடரில் வீரராகவும், 3 தொடரில் ஆலோசகராகவும் பணியாற்றினேன். அந்த அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Related posts: