ராஜஸ்தான் அணியை வெற்றிகொண்ட டெல்லி டேர்டெவில்ஸ்!

Thursday, May 3rd, 2018

ஐபிஎல் தொடரில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது.

ஐ.பி.எல். போட்டியின் 32-வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

முதலில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. ஆனால், டெல்லியில் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 9 மணியளவில் மழை குறைந்தது.

இதையடுத்து, போட்டியை 18 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

டெல்லி அணி 17.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. டெல்லி அணியில் பிரித்வி ஷா(47), ஷ்ரேயாஸ் அய்யர்(50), ரிஷப் பாண்ட்(69) ஓட்டங்களும் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணி பந்துவீச்சில் உனத்கட் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.மழையின் காரணமாக மீண்டும் ஆட்டம் மாற்றியமைக்கப்பட்டது. ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 12 ஓவர்களில் 151 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷார்ட், ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். பட்லர் தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கினார்.இதனால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. முதல் ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 14 ஓட்டங்கள் கிடைத்தது.

3-வது ஓவரை அவேஷ் கான் வீசினார். அந்த ஓவரில் பட்லர் மூன்று சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 23 ஓட்டங்கள் விளாசினார். இதனால் ராஜஸ்தான் அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 45 ஓட்டங்கள் குவித்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பட்லர் 18 பந்தில் அரைசதம் கடந்தார்.

இதில் 3 பவுண்டரிகளும், ஆறு சிக்ஸர்களும் அடங்கும். பட்லர் 26 பந்தில் 67 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அமித் மிஷ்ரா பந்தில் ஸ்டெம்பிங் ஆகி வெளியேறினார். அதன்பின் சஞ்சு சாம்சன் இறங்கினார். ராஜஸ்தான் அணி 8 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 92 ஓட்டங்கள் குவித்தது.

அப்போது அந்த அணியின் வெற்றிக்கு 24 பந்தில் 59 ஓட்டங்கள் தேவைப்பட்டது.சாம்சன் 3 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து வந்த பென் ஸ்டோக்ஸ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் 9 ஓவரில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 100 ஓட்டங்கள் எடுத்தது. 9-வது ஓவரை மேக்ஸ்வெல் வீசினார், அந்த ஓவரின் முதல் மூன்று பந்தையும் ஷார்ட் சிக்ஸராக மாற்றினார். ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த ஷார்ட் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

அதன்பின் ராகுல் திரிபாதி, கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் ராஜஸ்தான் அணி 12 ஓவர்களுக்கு 146 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் டெல்லி அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் போல்ட் 2 விக்கெட் வீழ்த்தினார். டெல்லி அணியின் ரிஷப் பாண்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Related posts: