சென்னை அருகே 30 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்த இடம்!

Thursday, July 7th, 2016

சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது.

திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் கொற்றலை ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டில் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரும்புக் காலத்தைச் சேர்ந்த மட்பாண்ட வகைகளும் கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் கிடைத்ததையடுத்து, இந்த இடம் ஆகழ்வாராய்ச்சி செய்வதற்கான இடமாகத் தேர்வுசெய்யப்பட்டு, இந்த ஆண்டில் அகழ்வாராய்ச்சி நடந்துள்ளது.

பட்டறைப் பெரும்புதூரில் உள்ள ஆனைமேடு, நத்தமேடு, இருளந்தோப்பு ஆகிய இடங்களில் மொத்தம் 12 ஆய்வுக் குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வில் 200க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்திருக்கின்றன.

160707085326_tamilnadu_archealogy_640x360_bbc_nocredit

கற்காலம் (கி.மு. 30,000 – கி.மு. 10,000) முதல் மனிதர்கள் வாழ்ந்ததற்கான மண் அடுக்கச் சான்றுகளும் இரும்புக் காலம், வரலாற்றுத் தொடக்க காலம் ஆகியவற்றின் எச்சங்களும் இங்கே கிடைத்திருப்பதால், கற்காலத்தில் துவங்கி தற்போதுவரை இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக மனிதர்கள் வாழ்ந்து வந்தததாகக் கொள்ள முடியும் என தமிழக தொல்லியல் துறையின் துணை இயக்குனர் ஆர். சிவானந்தம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

இந்த அகழாய்வில் குறிப்பிடத்தக்க பொருட்களாக, பழங்கற்காலத்தைச் சேர்ந்த இரு பக்க முனையுடைய கத்தி, புதிய கற்காலத்தைச் சேர்ந்த கோடாரிகள், சாம்பல் நிற மண்பாண்ட ஓடு, ரோமானிய மட்பாண்ட வகையான ரௌலட் மட்பாண்ட ஓடு, 23 உறைகளைக் கொண்ட உறை கிணறு ஆகியவற்றை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் சில செப்புப் பொருட்கள், கல் மணிகள், யானைத் தந்தத்தால் ஆண ஆபரணம், தமிழ் பிரம்மி எழுத்துக் கொண்ட பானை ஓடுகள், கூம்பு வடிவ ஜாடிகள் ஆகியவையும் இங்கே கிடைத்திருக்கின்றன.

இரு பக்க முனையுடைய கத்தி தமிழகத்தில் அரிதாகவே கிடைத்திருப்பதாகவும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த பொருட்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் அரிதாகவே கிடைத்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுவரை தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில்தான் ரோமானிய மட்பாண்ட வகைகள் கிடைத்திருப்பதாகவும் முதன் முதலாக இப்போதுதான் உள்பகுதியில் இம்மாதிரி மட்பாண்டம் கிடைத்திருப்பதாகவும் சிவானந்தம் சுட்டிக்காட்டுகிறார்.

160707085245_tamilnadu_archealogy_624x832_bbc_nocredit

சங்ககாலத்தில் இந்த இடம் ரோமானியர்களுடன் வர்த்தகம் மேற்கொண்டிருக்கக்கூடிய ஒரு வர்த்தக மையமாக இருந்திருக்கக்கூடும் என்பதையே இது சுட்டிக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த காலகட்டத்தில் காஞ்சிபுரத்திலிருந்து வடநாட்டிற்குச் செல்லும் பெருவழி இந்த ஊரின் வழியாக சென்றிருக்கலாம் என்றும் அப்போது வர்த்தகர்கள் இங்கே தங்கிச் சென்றிருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.

தற்போது அகழ்வாராய்ச்சி நடந்திருக்கும் பட்டறைப் பெரும்புதூர் பழங்காலத்திலிருந்து பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டுவந்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பல்லவர் காலத்தில் பெருமூர் என்றும் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் சிம்மலாந்தக சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்பட்டிருப்பதாக கல்வெட்டுக்களை மேற்கோள்காட்டி தொல்லியல் துறை கூறுகிறது.

160707085039_tamilnadu_archealogy_640x360_bbc_nocredit

Related posts: