சந்திரயான் – 1 விண்கலம் நிலவைச் சுற்றி வருவதைக் கண்டறிந்த  நாசா!

Sunday, March 12th, 2017

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் – 1 விண்கலம் மாயமாகிவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இன்னமும் அது நிலவைச் சுற்றி வந்து கொண்டிருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது.

நிலவிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அந்த விண்கலம் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது.நிலவை ஆராய்ச்சி செய்ய கடந்த 2008 ஆம் ஆண்டு சந்திரயான் – 1 விண்கலம் ஏவப்பட்டது.

சுமார் 2 ஆண்டுகள் நிலவைப் பற்றிய புகைப்படத் தகவல்களை பூமிக்கு அனுப்பும் வகையில் அது வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓராண்டுக்குள்ளாகவே சந்திரயான் – 1 விண்கலத்தில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு, பூமியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

திட்டமிட்ட காலத்தைவிட முன்னதாகவே, அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டபோதிலும் 95 சதவீத இலக்குகளை சந்திரயான் – 1 விண்கலம் நிறைவு செய்திருந்தது. நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என்பதை சந்திரயான் – 1 விண்கலம் மூலம்தான் இந்தியா கண்டறிந்தது.

இது உலக நாடுகளுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்தக் கண்டுபிடிப்பு இஸ்ரோ ஆராய்ச்சியின் மைல் கல்லாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், தொடர்பற்றுப்போன அந்த விண்கலம் இன்றளவும் நிலவைச் சுற்றி வந்து கொண்டிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது.

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் 200 கிலோ மீட்டர் தொலைவில் சந்திரயான் – 1 விண்கலம் சுற்றி வருவதாகவும் நாசா கண்டறிந்துள்ளது.

Related posts: