99 கல்வி வலயங்களிலிருந்து 2970 உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் – மாதம் 5000 ரூபா வழங்க ஏற்பாடு செய்யுமாறும் ஜனாதிபதி உத்தரவு!

க.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்து உயர்தரத்துக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, 99 கல்வி வலயங்களைச் சேர்ந்த 2,970 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 99 கல்வி வலய அலுவலகங்களில் இருந்து தலா 30 புலமைப்பரிசில் வெற்றியாளர்களை தெரிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட புலமைப்பரிசில் வெற்றியாளர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை அதிகபட்சமாக 24 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு .5,000 ரூபா உதவித்தொகையாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகி க.பொ.த உயர்தர வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளதுடன், புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் கோரப்படும்.
இதன்படி, இந்தப் பொறிமுறை தொடர்பில் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|