முன்பள்ளி சிறார்களுடன் அவர்களை வழிநடத்தும் ஆசிரியர்களது எதிர்காலமும் சிறப்பானதாக அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெகன்!

Wednesday, December 5th, 2018

முன்பள்ளி சிறார்களின் எதிர்காலம் மட்டுமன்றி அவர்களை சிறந்தவர்களாக உருவாக்க தம்மை அர்ப்பணித்துள்ள முன்பள்ளி ஆசிரியர்களது எதிர்காலமும்  சிறப்பானதாக அமைய நாம் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மகாத்மாஜி சனசமூகநிலைய முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் –

இன்று சிறார்களாக துள்ளித்திரியும் குழந்தைகள்தான் எதிர்காலத்தில் இந்த நாட்டை ஏதோ ஒரு துறை ரீதியாக வழிநடத்தவுள்ளார்கள். அந்தவகையில் அவர்களது எதிர்கால வழிநடத்தல்கள் சிறப்பானதாக அமையவேண்டும் என்பதே எமது பெருவிருப்பாகும்.

அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக கடந்த காலங்களில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பல உதவித் திட்டங்களையும் சலுகைகளையும் பெற்றுத்தந்திருந்தார்.

அவர்களது சேவைக்காக ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்படவேண்டும் என்ற நோக்கத்துடன்  அவர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக ஒரு தொகை ஊதியமும் வழங்கப்பட்டுவருகின்றது.

அந்தவகையில் இன்றைய சிறுவர்கள்தான் நாளைய வழிகாட்டிகளாக வளர்ந்து வருகின்றனர். அவர்களை சரியாக வழிநடத்தவேண்டியது பெற்றோர்களுடைய கடமையாகும். ஆனாலும்  எமது இளம் சமூகம் இன்று தவறான வழிக்கு சென்றுகொண்டிருக்கின்றது.

இதனை தடுத்து நிறுத்துவதற்கு பொது அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் மட்டுமன்றி தமிழ் அரசியல் தலைமைகளும் முன்வரவேண்டும்.

இந்த கிராமத்தில்கூட பல்வேறு அபிவிருத்திகளுக்கான உறுதுணையாக எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கனுளும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் இருந்துள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.

இவ்வாறான மக்களுக்கான சேவைகளை மேற்கொண்டுவரும் எமது கட்சிக்கு மக்களாகிய நீங்கள் இன்றுவரை அதிகளவான அரசியல் பலத்தை வழங்காதுள்ளமைதான் வேதனையானது. இவ்வாறான ஒரு நிலையால் தான் தமிழ் மக்களது அபிவிருத்தியும் வாழ்வியல் முன்னேற்றமும் கல்வித்தரமும் பின்நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் இனிவரும் காலங்களிலாவது உங்கள் தெரிவுகள் சரியானதாக அமையும் பட்சத்தில் அதனூடாக உங்கள் கிராமமும் பிள்ளைகளும், நீங்களும் வளர்ச்சியடைய  நாம் அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் உழைக்க தயாராக இருக்கின்றோம் என தெரிவித்தார்.

இதன்போது, வெற்றி பெற்ற சிறுவர்களுக்குப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த விளையாட்டு விழாவில் முன்பள்ளிச் சிறார்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

1

2

3

Related posts: