40 ஆயிரம் வீதி விபத்து: 3,100 பேர் உயிரிழப்பு!

Wednesday, February 21st, 2018

சாரதிகள் மற்றும் பாதசாரிகளினால் வீதி ஒழுங்குவிதிகள் சமிக்ஞைகளை முறையாக கடைப்பிடிக்காததன் பெறுபேறாக 2017 ஆம் ஆண்டில் சுமார் 40 ஆயிரம் வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு மேலதிகமாக வீதி வாகன விபத்துக்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 100 ஆகும்.

மேலும், சுமார் 7 ஆயிரத்து 500 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 2922 வாகன விபத்துக்களில் 3100 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என பொலிஸ் தலைமையக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையக வாகனப்பிரிவின் மூலம் வீதிச் சட்டங்களை முறையாகக் கடைப்பிடிக்காதோர் குறித்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது சுமார் ஒரு லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டனர் எனவும் பொலிஸ் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பொலிஸாரின் கண்காணிப்பு நடவடிக்கையில் சிக்காதோர் மேலும் பலர் கடந்த வருடத்தில் இருந்திருக்ககூடும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதிவிபத்துக்களை மீறியவர்கள் தொடர்பாக தண்டப்பணம் விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 40 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை மதுபோதை மற்றும் கவனவீனத்தால் ஏற்பட்ட விபத்துக்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டோ விபத்துக்களை பொறுத்த வரையில் பெரும்பாலான ஓட்டோக்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் பார்க்க அதிக பயணிகளை ஏற்றிச்சென்றமை மற்றும் வீதி ஒழுங்கு விதிகளை கவனத்தில் கொள்ளாமையே காரணம் ஆகும்.

மோட்டார் சைக்கிள் விபத்துக்களும் பெருமளவில் இடம்பெற்றுள்ளன. வீதி ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்காது வாகனங்களை செலுத்திய சாரதிகள் மாத்திரம் அன்றி இவ்வாறான தவறுகளை விளைவித்த பாதசாரிகளுக்கு எதிராகவும் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் பொலிஸ் வாகனப் பிரிவிற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாமை, வாகன பாதுகாப்புப் பட்டி அணியாமை, வாகன அனுமதிப்பத்திரம் இல்லாமை, காப்புறுதி சான்றிதழ் இல்லாமை ஆகியவற்றுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாதசாரிகளுக்கான வீதிக் கடவைகளை விடுத்து வேறு இடங்களில் வீதிகளைக் கடப்போர் வீதி சமிக்ஞைகளின் போது அவற்றைக் கவனத்தில் கொள்ளாது வீதியைக் கடத்தல், பாதசாரிகளுக்கான நடைபாதை பயன்படுத்தாமை போன்ற சேவைகளில் ஈடுபடும் பெரும் எண்ணிக்கையிலான பாதசாரிகள் தொடர்பிலும் வாகனப் போக்குவரத்து பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விடயங்களை பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts: