27 அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலை மேலும் 3 மாத காலத்திற்கு நீடிப்பு – வர்த்தகத்துறை அமைச்சு!

Wednesday, April 21st, 2021

27 அத்தியாவசிய பொருட்களின் விலையின் நிர்ணய தன்மையை மேலும் 3 மாத காலத்திற்கு தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வர்த்தகத்துறை அமைச்சு குறித்த 27 அத்தியாவசிய பொருட்களுக்கு மேலதிகமாக ஒரு சில அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலையை நிலையாக பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வர்த்தகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது –

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளின் நிர்ணய தன்மையினை பேண உற்பத்தியாளர்கள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மேலும் மூன்று மாத காலத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

27 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையின் நிர்ணய தன்மையினை பேணுவது அரசாங்கத்தின் இலக்காகும்.

அத்துடன் 27 அத்தியாவசிய பொருட்களுக்கு மேலதிகமாக பயறு , உணவிற்கு பயன்படுத்தும் அனைத்து சரக்கு பொருட்கள், கௌபி, உழுந்து, வெள்ளைபூண்டு, தேங்காய் எண்ணெய், சோயா, பேரீச்சம்பழம், பிஸ்கட், பட்டர், நூடில்ஸ் உள்ளிட்ட பொருட்களின் விலைகளின் நிர்ணய தன்மையினை 3 மாத காலத்திற்கு தொடர்ந்து பேண தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் தொடர்பில் உற்பத்தியாளர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை தங்களின் யோசனைகளை வர்த்தகத்துறை அமைச்சுக்கு முன்வைக்க முடியும் என்றும் 28 ஆம் திகதி கிடைக்கப் பெற்ற யோசனைகள் பரிசீலனை செய்யப்படும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: