25 வீதத்துக்கும் அதிகமானவர்கள் கடமையில் ஈடுபடுத்தினால் சட்ட நடவடிக்கை – தனியார் நிறுவன தலைவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொலிஸ்மா அதிபர் கடும் எச்சரிக்கை!

Wednesday, May 12th, 2021

இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவலால் நிறுவனங்களில் 25 வீதத்துக்கும் அதிகமானவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவது கண்டறியப்பட்டால், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண எச்சரித்துள்ளார்.

அதற்கமைய நிறுவனத்தின் தலைவர் மற்றும் பணியாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகளுக்கு கடந்த நள்ளிரவுமுதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாண எல்லைகளில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் மாகாணங்களுக்கு இடையே கடந்த நள்ளிரவு முதல் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ள நிலையில், மாகாண எல்லைகளில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மாகாண எல்லைகளின் ஊடான அனைத்து வீதிகளிலும் வீதித் தடைகளை அமைத்துப் பொலிஸாரும், இராணுவத்தினரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவர் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தக் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்புடையவர்கள், அரச மற்றும் தனியார் அலுவலகங்களின் ஊழியர்கள் தமது சேவை அடையாள அட்டையைக் காண்பித்து மாகாண எல்லைகளின் ஊடாக பயணிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தனிப்பட்ட தேவைகளுக்காக செல்வோர், உறவினர் வீடுகள், சுற்றுப் பயணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வோருக்கு மாகாண எல்லைகளைத் தாண்ட அனுமதி வழங்கப்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: