இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை பல ஆயிரத்தை தாண்டும் – மூவாயிரத்தை எட்டினால் சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்படும் என எச்சரிக்கை!

Monday, June 1st, 2020

நாட்டில் சமூக மட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் மக்களிடத்திலிருந்து அதிகளவானவர்கள் தொற்றுடன் நாளாந்தம் இனங்காணப்பட்டுவரும் நிலையில் இந்நோயால் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெருக்கி வருகிறது.

இந்நிலையில் 2500க்கும் அதிகமாக கொரோனா நோயாளிகள் அதிகரித்தால் இலங்கை மருத்துவதுறையினரால் சிகிச்சையளிக்க முடியாத நிலை ஏற்படும் என ஏற்கனவே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2500 முதல் 3000 கொரோனா நோயாளிகள் இருந்தால் சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் கணிசமான அளவு நோயாளர்கள் கட்டுப்படுத்தப்பட்ட போதும், அண்மைக்காலமாக வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுவர்களால் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் 45 ஆயிரத்திற்கும் அதிமான இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் அனைவரும் நாடு திரும்பும் பட்சத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

குவைத் உட்பட நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டவர்களின் பெரும்பான்மையோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் கடற்படையினருக்கு இடையில் பரவும் கொரோனா ஆபத்து இன்னமும் நீங்கவில்லை.

இவ்வாறான நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் இலங்கை பாரிய ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: