இலங்கையில் டொலர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது – மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு!

Sunday, March 19th, 2023

இலங்கையில் டொலர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி உயர்வை அடுத்தே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலையில் தேவையான விடயங்களுக்கு போதுமான டொலர்கள் கையிருப்பில் இருப்பதாக அவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

நாளை 20ஆம் திகதியன்று இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம், 2.9 பில்லியன் டொலர்களுக்கான ஒப்புதலை வழங்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், இதனையடுத்து நாளை மறுநாள் நாட்டுக்கு முதல் கட்டமாக 390 மில்லியன் டொலர்கள் விடுவிக்கப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் கடன் மறுசீரமைப்பு பேச்சுக்கள் எதிர்வரும் ஜூன் அளவில் நிறைவுப்பெறும் என்றும் அவர் குறி;ப்பிட்டுள்ளார்.

அதேநேரம் உள்நாட்டில் கடன் மறுசீரமைப்புக்கும், மறுசீரமைப்புப் பணிகளில் வெளிநாட்டவர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கும் இலங்கையின் வங்கிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, குறுகிய காலத்துக்குள் குறைந்தது 5 பில்லியன் டொலர் கையிருப்பை ஏற்படுத்தி கொள்வதுஅரசாங்கத்தின் இலக்காகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்

தெஹியோவிட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப்பெற்ற பின்னர் பொருளாதாரம் மீட்சியடையும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: