24,000 கிலோ ஆப்பிள் தொகையை தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு வழங்க நடவடிக்கை!

Saturday, June 11th, 2022

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 24,000 கிலோ கிராம் அப்பிள் பழங்களின் தொகையை உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளாமை காரணமாக அதனை கொழும்பு தெஹிவளை மிருககாட்சிசாலைக்கு வழங்குவதற்கு துறைமுக அபிவிருத்தி விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வாவின் தீர்மானத்திற்கு அமைய அதனை அமைச்சர் தெஹிவளை மிருககாட்சிசலையின் அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்.

கொழும்பு சர்வதேச துறைமுகத்தின் சி.அய்.சி.டி பகுதிக்கு கடந்த பெப்ரவரி மாதம் சீனாவில் இருந்து குறித்த ஆப்பிள் கொள்கலன்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த ஆப்பிள் கொள்கலன்களை அதனை இறக்குமதி செய்தவர்கள் இதுவரையில் கொண்டு செல்லாமல் இருப்பது தொடர்பாக தனக்கு வழங்கப்பட்ட தகவல் ஒன்றை அடுத்து குறித்த சி.அய்.சி.டி நிறுவனத்திடம் நடத்திய பேச்சுவார்த்தையினை தொடர்ந்தே இவற்றை மிருககாட்சிசாலைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவிக்கின்றார்.

இது போன்று இன்னும் பல பொருட்களை அவை வீணாக்கப்படாமல் அல்லது அழிக்கப்படாமல் அதனை பிரயோசனமான ஒரு விடயத்திற்காக பயன்படுத்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் துறைமுக அதிகாரிகளுக்கு இதன்பொழுது பணிப்புரை வழங்கியுள்ளார்.

இந்த குறித்த கொள்கலன்களில் 24000 கிலோ கிராம் எடை கொண்ட அதாவது சுமார் ஒரு இலட்சம் ஆப்பிள் காய்கள் இருப்பதாக சி.அய்.சி.டி நிறுவனத்தின் பிரதானி ஜெக் உவாங் தெரிவிக்கின்றார்.

குறித்த ஆப்பிள் தொகையின் பெறுமதி சுமார் இரண்டு கோடி பெறுமதி வாய்ந்தவை என துறைமுகத்தின் பணிப்பாளர் பிரபாத் ஜயன்த தெரிவிக்கின்றார்.

இந்த ஆப்பிள் கொள்கலன்களை தெஹிவளை மிருககாட்சிசாலைக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை இலங்கை துறைமுக அதிகார சபையும் சி.அய்.சி.டி நிறுவனமும் இணைந்து மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: