சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் – துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்து!

Friday, June 4th, 2021

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தினார்.

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களுக்கு அது தொடர்பில் அறிவித்த பிரதமர், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை அந்தந்த மாவட்ட செயலாளர்களின் ஊடாக உடனடியாக செயற்படுத்துமாறு தெரிவித்துள்ளார்.

அதற்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு பிரதமர் இதன்போது நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

நாட்டின் பல பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பிரதேசங்கள் மழை நீரில் மூழ்கல், வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயங்கள் அவற்றில் பிரதானமாகும்.

மேல் மாகாணம், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு மக்களுக்கு தெரியப்படுத்துமாறு கௌரவ பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: