2020 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது- நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றுகையில் பிரதமர் தெரிவிப்பு!

Thursday, November 12th, 2020

2020 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்களை இலங்கை அரசாங்கம் செலுத்திவிட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் 2 ஆவது வாசிப்பு மற்றும் குழுநிலை விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பமானது.

நிதி அமைச்சர் என்ற ரீதியில் 11 ஆவது முறையாக இம்முறையும் ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இலங்கை கடும் கடன் நெருக்கடியில் உள்ளது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்கட்சியினர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர் என்றும் தெரிவித்த பிரதமர் மஹிந்தராஜபக்ச தற்போதைய நிர்வாகம் கடன் விவகாரத்தினை சிறப்பாக கையாண்டு வருகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2020முதல் இலங்கை 4200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடனாக செலுத்தவேண்டியிருந்தது. எனினும் 2020 இற்கான கடன்களை செலுத்திவிட்டோம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

வலுவான பொருளாதார திட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாகவே இதனை செய்ய முடிந்தது என்றும் அரசாங்கம் தேவையற்ற இறக்குமதிகளுக்கு தடை விதித்ததுடன், தேவையற்ற வெளிநாட்டு கடன்களை இடைநிறுத்தவும் தீர்மானித்தது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்

அத்துடன் இலங்கையில் 2 ஆவது கொரோனா அலையில் மரண எண்ணிக்கை உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், குறைப்பதற்கு முடிந்துள்ளமை நாட்டில் உள்ள இலவச சுகாதார கட்டமைப்பின் சிறந்த செயற்பாடாகும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: