2018 இல் 35 அதிகாரிகள் உட்பட 40 பேர் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது!

Wednesday, March 27th, 2019

2018 ஆம் ஆண்டில் 21 அரச நிறுவனங்களைச் சேர்ந்த 35 அதிகாரிகள் உட்பட 40 பேர் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் மற்றும் குற்ற விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதில் பொலிஸ் திணைக்களத்திலும் பல தரத்திலும் பதவியில் இருந்து வந்த 9 பேர் அடங்குவர்.

உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர், உதவிப் பொலிஸ் அதிகாரி ஒருவர், பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், சார்ஜன்ட் ஒருவர், பொலிஸ் கான்ஸ்டபிள் மூவர் அடங்குவர். ஏனையோர் அரச நிறுவனங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் மூன்று கிராம உத்தியோகத்தர்களும் அடங்குவர். 2018 இல் கண்டு பிடிக்கப்பட்ட மிகப்பெரிய இலஞ்ச சுற்றிவளைப்பு கந்தளாய் சீனி உற்பத்தித் தொழிற்சாலையின் இயந்திரங்கள் மற்றும் கட்டடங்களை பெற்றுக் கொள்வதற்கான அனுமதியைப் பெற்றுத்தருவதாக கூறி இந்தியப்பிரஜை ஒருவரிடமிருந்து 540 மில்லியன் இலஞ்சமாகக் கோரி அதில் 20 மில்லியனைப் பெற்றுக் கொண்ட இரு உயர் அதிகாரிகளாவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 2017 ஆம் ஆண்டில் 39 சம்பவங்களில் 51 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Related posts: