கிராம அலுவலர்களாக நியமனம் பெற்றவர்களில் 24 பேர் கடமைகளை பொறுப் பேற்கவில்லை!

Friday, June 8th, 2018

வடக்கு மாகாணத்தில் அண்மையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 196 கிராம அலுவலர்களில் 24 பேர் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை என மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிராம அலுவலர்கள் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 2016 ஆம் ஆண்டு விண்ணப்பம் கோரப்பட்டு அதற்கமைய 2017 ஆம் ஆண்டில் எழுத்துப் பரீட்சையும் இடம்பெற்றிருந்தது. இருப்பினும் அவர்களுக்கான நேர்முகத் தேர்வு நீண்டகாலமாக இழுபட்ட நிலையில் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நேர்முகத் தேர்வு இடம்பெற்றது.

இதன் அடிப்படையில் அண்மையில் மாவட்ட ரீதியில் நியமனம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் வடக்கின் 5 மாவட்டத்திலும் தற்போது 285 கிராம அலுவலர்களுக்கான பதவிகள் வெற்றிடமாகவுள்ள நிலையில் 196 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டனர். அவ்வாறு நியமிக்கப்பட்ட 196 கிராம சேவகர்களில் 25 பேர் தமது கடமையைப் பொறுப்பேற்க முன்வரவில்லை.

அதன் பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட 77 பேரில் 62 பேர் மட்டுமே கடமையைப் பொறுப்பேற்றுள்ளனர். மன்னார் மாவட்டத்துக்கு 28 கிராம சேவகர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் இருவர் கடமையைப் பொறுப்பேற்கவில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 43 பேர் நியமிக்கப்பட்ட நிலையில் 38 பேர் மட்டுமே கடமையைப் பொறுப்பேற்றுள்ளனர்.

இதேபோன்று வவுனியா மாவட்டத்தில் 30 பேர் நியமிக்கப்பட்ட நிலையில் 29 பேர் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 18 பேர் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது 17 பேர் கடமையைப் பொறுப்பேற்றுள்ளனர் என மாவட்டச் செயலர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் 113 கிராம சேவகர்களுக்கான பதவிகள் வெற்றிடமாகவே உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: