நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்கவில்லை – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Monday, August 1st, 2022

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்வதற்காக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

கண்டியில் நேற்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்தபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து தீர்வினைப் பெற்றுக்கொடுக்குமாறு பிரதம தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படும் பிரேரணைக்கு தாங்களும் கொள்கையளவில் உடன்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு சில எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க விரும்பாவிட்டாலும், புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பெரும்பான்மையான எம்.பி.க்கள் பொதுவான திட்டத்தின் கீழ் பணிபுரியும் போது, அது உலகளவில் அங்கீகரிக்கப்படும் என்பதால், கூடுதல் சர்வதேச ஆதரவைப் பெற முடியும் என்று பிரதமர் கூறினார்.

புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தமானியாக வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் வரைவில் மேலும் மாற்றங்களை எதிர்பார்ப்பதாக பிரதமர் கூறினார்.

உத்தேச குழு அமைப்பின் மூலம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆட்சி அமைப்பில் அங்கம் வகிக்கும் வாய்ப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: