19ஆம் திகதிக்கு முன் தேர்தலை நடத்துவது நடைமுறை சாத்தியமற்றது – தெளிவுபடுத்தத் தயார் என்கிறார் அணையாளர் நிமால் புஞ்சிஹேவா!

Tuesday, March 7th, 2023

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை இம்மாதம் 19 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் அவர்கள் கோரும் தினத்தில் தேர்தலை நடத்துவது நடைமுறை சாத்தியமற்றது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா கேசரிக்கு தெரிவித்துள்ளார்.

அத்தோடு கடிதம் மூலம் அவர்களால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஏற்று , அவர்களை சந்தித்து நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த தாமும் எதிர்பார்ப்பதாகவும் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்..

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி , சுதந்திர மக்கள் கூட்டணி , தமிழ் முற்போக்கு கூட்டணி , அகில இலங்கை மக்கள் காங்ரஸ் , தமிழ் தேசிய கூட்டமைப்பு , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட சகல பிரதான எதிர்க்கட்சிகளும் கூட்டாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

அதற்கமைய எதிர்க்கட்சிகளால் அனுப்பப்பட்டுள்ள கடிதம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா குறிப்பிடுகையில் ,

பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் எமக்கு கிடைக்கப் பெற்றது. அந்த கடிதத்தில் அவர்கள் எம்மை சந்திக்க எதிர்பார்ப்பதாக விடுத்துள்ள கோரிக்கையை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம்.

அதற்கமைய அவர்களை சந்தித்து தேர்தல் தினத்தை தீர்மானிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த நாமும் எதிர்பார்த்துள்ளோம்.

எவ்வாறிருப்பினும் அவர்கள் கோருவதைப் போன்று இம்மாதம் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தேர்தலை நடத்துவது நடைமுறை சாத்தியமற்றது.

திறைசேறி செயலாளர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து அதற்கமையவே தேர்தலை நடத்துவதற்கான தினத்தை தீர்மானிக்க முடியும்.

தேர்தல் இடம்பெற முன்னர் தபால் மூல வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். எனவே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அவ்வாறன்றி முதலில் தேர்தலை நடத்துவதற்கு சட்டத்திலும் இடமில்லை.

எனவே 19ஆம் திகதி தேர்தலை நடத்துவது நடைமுறை சாத்தியமற்றது என்பதை நாம் அவர்களுக்கு தெளிவுபடுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: