13 வருடங்களின் பின் கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் டியோன் இலங்கை வருகை !

Wednesday, July 27th, 2016

மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த கடப்பாட்டை நிறைவேற்ற  இலங்கை முன்வர வேண்டுமென  இலங்கை அரசை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த ஸ்டீபன் டியோன் இன்றைய தினம்   இலங்கைக்கு  வருகைதரவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் 13 வருடங்களுக்குப் பின்னர்    இலங்கையிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும்  முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. ஸ்டீபன் டியோனின் இந்தப் பயணத்தின் ஒரு கட்டமாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை நாளை மதியம் சந்தித்து அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்களை கனேடிய வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளதாக இலங்கை வெளிவிவார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கலந்துரையாடல்கள், சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்  மனோ கணேசனை சந்திக்கவுள்ள ஸடீபன் டியோன், கனேடிய தேசிய மொழிகள் சமத்துவ முன்னேற்றத்திட்டம் தொடர்பில்  கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார். அத்துடன் கனேடிய அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் உதவியுடன் வடக்கில் மேற்கொள்ளப்படும், கண்ணிவெடி அகற்றல், விவசாய அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் அவர் நேரில் பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: