“சவாலை வெற்றி கொண்ட சுபீட்சமானதொரு தாய்தாடு” இலங்கையின் 74 ஆவது தேசிய சுதந்திர தின ஏற்பாடுகள் குறித்து பிரதமர் அறிவுறுத்து!

Tuesday, November 30th, 2021

 “சவாலை வெற்றி கொண்ட சுபீட்சமானதொரு தாய்தாடு” எனும் தொனிப்பொருளில் 74 ஆவது தேசிய சுதந்திர தினம் கொண்டாட்டம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பெருமையுடன் கொண்டாட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட சகல இராஜதந்திரிகளுக்கும் 74 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு பிரதமர் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களுக்கு இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கையின் 74 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் – 2022 ஏற்பாட்டுக் குழுவின் முதலாவது குழுக்கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 74 ஆவது சுதந்திர தினத்தை வெற்றிகரமாக கொண்டாடுவதற்கு அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் குறித்தும் இதன்போது பிரதமரின் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

சுதந்திர தினத்திற்கு முன்னதாக நடைபெறும் தர்ம உபதேச நிகழ்வினை 2022 பெப்ரவரி 02ஆம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க, கிறிஸ்தவ சமய வழிபாடுகள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் என்பவற்றை பரிந்துரைக்கும் பொறுப்பு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. சுதந்திர தின நிகழ்வுகளை முறையான சுகாதார வழிகாட்டல்களுக்கமைய முழுமையாக தடுப்பூசி ஏற்றியவர்கள் மாத்திரமே பங்கேற்க வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: