13 ஐ முழுமையாக அமுல்படுத்த பொதுஜனபெரமுன மக்களுக்கு உறுதியளிக்கவில்லை – புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் – பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!

Tuesday, February 14th, 2023

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கவில்லை.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முழுமையான ஆதரவு வழங்குவோம். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியால் தனித்து எவ்வித தீர்மானமும் எடுக்க முடியாது.13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது அவசியமானதாகும்.

தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மக்கள் வாக்கெடுப்பை நடத்துவதும், அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெறுவதும் சாத்தியமற்றது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார் இருப்பினும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையில் ஒற்றையாட்சி முறைமை ஊடாக அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதாகவும், பொலிஸ் அதிகாரங்களில் மாற்றமில்லை, மத்திய அரசாங்கத்திடமே பொலிஸ் அதிகாரம் உரித்தாக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இடமளிக்க முடியாது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இடமளித்தால் நாட்டுக்காக உயிர்நீத்தவர்களை அவமதிப்பதாக கருதப்படும், ஆகவே 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் தீர்மானத்தை கைவிடுமாறு ஆளும் தரப்பு குழு கூட்டத்தின் போது பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்கள்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் பற்றிய பேச்சுக்களை முன்னெடுத்தால் நாட்டில் இல்லாத பிரச்சினைகள் தோற்றம் பெறும்.காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர எவரும் இணக்கம் தெரிவிக்கமாட்டார்கள். அதிகார பகிர்வு விவகாரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை ஏனைய மாகாணங்களின் நிலைப்பாடு வேறுப்பட்டதாக காணப்படுகிறது.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தற்காக பொதுஜன பெரமுனவிற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. காலம் காலமாக காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பிற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான வரைபு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது, ஆகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவோம். அரசியலமைப்பு திருத்தம் ஊடாக குறுகிய கால அடிப்படையில் தீர்வு காண்பதற்கு பதிலாக புதிய அரசியலமைப்பு ஊடாக நிலையான தீர்வு காண்பது சிறந்ததாகும். ஆகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: