12 பாடசாலைகளுக்கு எதிராக இன்று விசாரணை ஆரம்பம்!

Wednesday, August 31st, 2016

பரீட்சை முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நுவரெலியா மாவட்டத்தின் 12 பாடசாலைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.வெளி மாவட்ட மாணவர்கள் நுவரெலியா மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திலக் ஏக்கநாயக்க ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட விடயங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படவுள்ளது.

பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகள், அவர்களின் வதிவிடங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வந்திருந்தால் அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்கள், அவ்வாறான மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதேவிதமான முறைப்பாடுகள் குறித்து வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து நேற்று கல்வி அமைச்சில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

Related posts: