கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா கைகொடுக்கும் – ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா அறிவிப்பு!

Friday, January 20th, 2023

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர் கடன் உதவியை பெறுவதற்கான தீவிர முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் நிதி உதவியை பெறுவதற்கு இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கிய இந்தியா மற்றும் சீனாவின் ஆதரவு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுதொடர்பாக இந்தியா மற்றும் சீனாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இலங்கையானது, இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டொலர் கடன்களை வழங்கவேண்டியுள்ளது. இதுவும் கடன் மறுசீரமைப்பின் கீழ் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கடந்த வருடம் ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதிக்குள் இலங்கைக்கு துரித உதவியாக 4 பில்லியன் டொலர்களை வழங்கியது.

எவ்வாறாயினும், இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா ஆதரவளிப்பதாகவும், இதுதொடர்பாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: