11 பேரை காவு வாங்கிய பேருந்து விபத்து – அனுமதி பத்திரத்துக்கு புறம்பாக பயணித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Monday, July 10th, 2023

பொலன்னறுவை, மன்னம்பிட்டிய பிரதேசத்தில் கொட்டலிய பாலத்திலிருந்து பேருந்து ஒன்று ஆற்றில் வீழ்ந்த சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்று விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேநேரம் குறித்த பேருந்தின் சாரதி முன்னரும் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமைக்காக அபராதம் விதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், விபத்தின்போது சாரதி மதுபோதையில் இருக்கவில்லை எனவும், அவர் வேறு ஏதேனும் போதைப்பொருளை பயன்படுத்தியிருந்தாரா என்பது குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பேருந்து, வழங்கப்பட்ட வீதி அனுமதி பத்திரத்துக்கு புறம்பாக பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றிரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் 11 பேர் பலியானதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில், 14 வயதான சிறுவன் ஒருவரும் அடங்குவதாக பொலன்னறுவை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சம்பத் இந்திக்க குமார தெரிவித்துள்ளார்..

எனினும் குறித்த ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ள ஒருவரை தேடி, கடற்படை மற்றும் பொலிசார் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்தநிலையில் விபத்து தொடர்பில் கருத்துரைத்த, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, கிழக்கு மாகாணத்துக்குள் மாத்திரம் பயணிப்பதற்கே குறித்த பேருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன்காரணமாக குறித்த பேருந்து வடமத்திய மாகாணத்துக்குள் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபட முடியாது.

இந்த விடயம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அவ்வாறான எந்த அனுமதி பத்திரமும் வழங்கப்படவில்லை. குறிப்பாக கதுருவெலயில் இருந்து காத்தான்குடி அல்லது கல்முனை வரையில் பயணிப்பதற்காக எந்தவித பேருந்து அனுமதி பத்திரமும் வழங்கப்படவில்லை.

விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளருக்கு 7 பேருந்துகள் உள்ளதாகவும், அவற்றில் 6 பேருந்துகளுக்கு இவ்வாறான முறையற்ற அனுமதி பத்திரங்களே பெறப்பட்டுள்ளதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபையே இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, குறித்த விபத்து தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் விபத்துக்குள்ளானவர்களுக்கு தேவையான உடனடி உதவிகளை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: