1.95 பில்லியன் நிதியில் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு அமைச்சரவை !

Monday, February 4th, 2019

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் 1.95 பில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக தெரியவருகின்றது.

பலாலி விமான நிலையத்தை 1965 மில்லியன் ரூபா செலவில், அபிவிருத்தி செய்யும் திட்டம் ஒன்றுக்கு கடந்த ஆண்டு ஒக்ரோபர் 23ஆம் நாள், அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில், அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், அமைச்சரவையில் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கான புதிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 100 பயணிகளை ஏற்றக் கூடிய விமானங்கள் வந்து செல்வதற்கு ஏற்றவகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும். இந்த அபிவிருத்திப் பணிகள் இலங்கை விமானப்படையின் மூலம் மேற்கொள்ளப்படும்.

இதன் முதற்கட்டமாக, சாத்திய ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக, விமான நிலைய, விமானசேவைகள் நிறுவனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த சாத்திய ஆய்வுக்குப் பின்னர், விமான நிலைய அபிவிருத்திக்கான தொழில்நுட்பக் குறிப்புகளில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே குறித்த பலாலி விமான நிலையத்துடன் காங்கேசன்துறை துறைமுகமும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் இதனூடாக வடபகுதியின் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியும் என்பதுடன் வடபகுதி இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொள்ள முடியும் என்றும் கடந்த ஆட்சிக்காலத்திலும் தற்போதும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: