பொலிஸ் மா அதிபராக சி.டி. விக்ரமரத்னவின் பெயர் ஜனாதிபதியால் நாடாளுமன்ற பேரவைக்கு பரிந்துரை!

Saturday, November 21st, 2020

பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற பேரவைக்கு பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் சி.டி. விக்ரமரத்னவின் பெயரை பரிந்துரைத்துள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற பேரவை கூடும்போது இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு பின்னர் ஜனாதிபதியினால் நியமனம் முறைப்படி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து, அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதை அடுத்து 33 வருடம் அனுபவம் கொண்ட சி.டி. விக்ரமரத்ன பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.

இதனை அடுத்து பூஜித் ஜயசுந்தர கடந்த மார்ச் மாதம் ஓய்வு அறிவித்ததை தொடர்ந்து பதில் பொலிஸ் மா அதிபராகவே பதவி வகித்து வரும் சி.டி. விக்ரமரத்ன இதற்கு முன்னரும் 13 முறை அந்தப் பதவியை இடைக்காலங்களில் வகித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது  சி.டி. விக்ரமரத்ன ஜனாதிபதியால் பொலிஸ் மா அதிபராக பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: